குவாங்டாங் மாகாணத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட குவாங்சோவில் 2021 செப்டம்பர் 10 -12 வரை நடைபெற்ற சீனாவின் (குவாங்டாங்) சர்வதேச சுற்றுலாத் தொழில்துறைக் கண்காட்சியில் குவாங்டாங் காட்சி சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் பங்கேற்றது.
முக்கிய சுற்றுலா இடங்கள், தொல்பொருள் மற்றும் கலாச்சாரத் தளங்களின் அழகிய புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ள வகையில் துணைத் தூதரகம் இலங்கையின் கூடத்தை வடிவமைத்திருந்தது. ஏராளமான பார்வையாளர்களைக் கவரும் வகையில் கூடததில் இலங்கையின் பல கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் இலங்கையின் தற்போதைய கோவிட்-19 நிலைமை மற்றும் பயண வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர்.
ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் சீனாவின் பிராந்தியங்களில் உள்ள 31க்கும் மேற்பட்ட நாடுகளின் துணைத் தூதரங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றன. சீனாவின் 10 மாகாணங்களின் 21 நகரங்களின் பிரதிநிதிகளும் இதில் உள்ளடங்குவர். மேலும், உள்ளூர் பயண முகவர்கள், ஹோட்டல்கள், அழகிய இடங்கள் மற்றும் கலாச்சார சுற்றுலா நிறுவனங்களும் கண்காட்சியின் ஒரு பகுதியாக இருந்தன. கண்காட்சியில் சுமார் 100,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
2005 முதல் ஆண்டுதோறும் வெற்றிகரமாக முனனெடுக்கப்பட்டு வரும் சீன சர்வதேச சுற்றுலாத் தொழிற்துறைக் கண்காட்சியானது, சர்வதேச அளவில் மிக உயர்ந்த மட்டத்தில் சீனாவின் மிகப்பெரிய தொழில்முறைக் கண்காட்சிகளில் ஒன்றாக அபிவிருத்தியடைந்தது. இது சுற்றுலா தொடர்பான கண்காட்சியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களுக்கான தகவல்களைப் பகிர்தல், பொருட்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் வணிக அபிவிருத்திக்கான விஷேடமானதொரு தளமாகும்.
இலங்கையின் துணைத் தூதரகம்
குவாங்சோ
2021 செப்டம்பர் 17