2023 ஜூன் 27 முதல் 29 வரை சீனாவின் தியான்ஜினில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கவுள்ள தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.
'தொழில் முனைவோர்: உலகளாவிய பொருளாதாரத்தின் உந்து சக்தி' என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மன்றம், உலகெங்கிலும் உள்ள 90 நாடுகளின் அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களிடையே உரையாடலுக்கான தளத்தை வழங்கவுள்ளதுடன், பொருளாதார சவால்களில் பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சர் சப்ரி, 'இழந்த தசாப்தத்தை தடுத்தல்' என்ற வட்டமேசை மாநாட்டிலும், 'நாளைய பொருளாதாரத்தை எவ்வாறு வலுப்படுத்துவது' என்ற தலைப்பிலான பங்குதாரர் உரையாடலிலும் பங்கேற்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் கின் காங் மற்றும் ஏனைய உயர்மட்ட பிரமுகர்களுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். மேலும், அமைச்சர் அலி சப்ரி பெய்ஜிங்கில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனும், மற்றும் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் உள்ள இலங்கை மாணவர்களுடனும் கலந்துரையாடவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜூன் 23