இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகராலய ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் எளிமையான நிகழ்வில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன, தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், அடுத்த ஆண்டு கொண்டாட்டங்களில், சமூக உறுப்பினர்களும் பங்கேற்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு ஊழியர்களை அவர் கேட்டுக் கொண்டார். 2021இன் வெற்றிகளை எடுத்துரைத்த உயர்ஸ்தானிகர், உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் சிங்கப்பூர் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆதரவுடன் புதிய இலங்கை தயாரிப்புக்களை சிங்கப்பூர் சந்தையில் நுழைவதைப் பாதுகாக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதையை தொடங்குவதற்கு வழங்கிய ஆதரவிற்காக சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வெளியுறவு அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு உயர்ஸ்தானிகர் நன்றிகளைத் தெரிவித்தார். ஸ்ரீPலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் ஆகிய இரண்டும் வாரத்திற்கு பல விமானங்களை இயக்குவதுடன், தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதையின் மூலம், வணிகம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டிற்கும் பயணத்தை அதிகரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயர்ஸ்தானிகராலயம் அதே நாளில் மெய்நிகர் சுதந்திர தின நிகழ்வையும் நடாத்தியது. சிங்கப்பூர் உள்துறை அமைச்சு மற்றும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் டெஸ்மண்ட் டான் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். இந்து சமுத்திரத்திற்கும் ஆசியாவிற்கும் இடையிலான பண்டைய கடல் வர்த்தகப் பாதைகளில் இரு நாடுகளும் முக்கிய புள்ளிகளாக இருந்த காலத்திலிருந்து இலங்கையும் சிங்கப்பூரும் பகிர்ந்து கொள்ளும் உறவு உறுதியான கலாச்சார மற்றும் வரலாற்று அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தனது செய்தியில் தெரிவித்தார். தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் தொடர்ந்து ஆழமடைந்து வளர்ச்சியடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.இணைந்து பணியாற்றுவதன் மூலம், இரு நாடுகளும் சர்வதேச வர்த்தகத்திற்கான சவால்களை வழிநடத்தவும், புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் இணையவழி வர்த்தக ஓட்டங்களுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிந்தது என அமைச்சர் டெஸ்மண்ட் டான் குறிப்பிட்டார்.
மெய்நிகர் நிகழ்வில் பல கலாச்சார அம்சங்கள், குறிப்பாக பிரபல கலைஞரான நதீகா குருகேவினால் நிகழ்விற்காக உருவாக்கப்பட்ட இசை நிகழ்ச்சி உட்பட பல அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. அவரது இசையமைப்பு நிகழ்ச்சி இலங்கையின் நாட்டுப்புற இசையை பாரம்பரிய இசை கூறுகள் மற்றும் கிராமப்புற இலங்கையின் அழகை சித்தரிக்கும் வீடியோ பின்னணியுடன் காட்சிப்படுத்தியது. இலங்கை விமானப்படை நடனக் குழு இலங்கை நடன வடிவங்களின் பல்வேறு கூறுகளை இணைவு நடன நிகழ்ச்சியின் மூலம் காட்சிப்படுத்தியது.
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு இலங்கைத் தமிழ் சமூகத்தின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நிகழ்வில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர் அரவிந்த் குமாரசாமி தலைமையிலான அப்சரா நடன அகாடமி சிங்கப்பூரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இலங்கையில் பிறந்து தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் அலெக்சாண்டர் மார்க் டி மெல் என்ற பதினொரு வயதுடைய சிறுவர் கலைஞரின் சிறப்புப் பிரிவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. அவர், ஹைஆர்ட் சிங்கப்பூரின் உதவியுடன், இலங்கையின் தேசியக் கொடியை வரைந்த அதே நேரத்தில், பார்வையாளர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் உள்ள விஷேட தேவையுடைய சிறுவரர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை அனுப்பினார். இந்த நிகழ்வின் காணொளி உயர்ஸ்தானிகராலய இணையத்தளத்திலும் முகநூல் பக்கத்திலும் உள்ளது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
சிங்கப்பூர்
2022 பிப்ரவரி 15