இலங்கை மற்றும் நேபாளத்திலுள்ள சுற்றுலாத் துறை அமைச்சானது கொழும்பு மற்றும் காத்மாண்டுவை இணைக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நேரடி விமான சேவைகளுக்கு வரவேற்பினை வழங்கியுள்ளது .
இந்தப் பின்னணியில், நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கைக்கும் நேபாளத்திற்குமிடையிலான சுற்றுலாத் துறையினை மேம்படுத்தவும், கூட்டு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை ஆராயவும் நேபாள சுற்றுலா சபை மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் ஆகியவற்றுடன் கை கோர்த்துள்ளது. நேபாள சுற்றுலா சபையினால் இலங்கை மற்றும் நேபாளத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் துறைப் பங்குதாரர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து 2021 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று வலைதளக் கருத்தரங்கு நடைபெற்றது. தொழிற்துறை பிரதிநிதிகள் நேரடி விமான சேவையினை வரவேற்றதுடன் சுற்றுலா துறையினை மேம்படுத்த இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் தொற்றுநோய்க் காலப்பகுதியில் பயணிக்கும் பயணிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.
நேபாள சுற்றுலா சபையின் தலைமை நிர்வாக அதிகாரி தனன்யஜ ரெக்மி வழங்கிய குறிப்புரைகளில், நேபாள சுற்றுலாத்துறைக்கான கோவிட்டுக்கு பிந்தைய தந்திரோபாயத்தையும் நேபாளத்தில் ஆண்டு முழுவதும் ஈர்க்கும் இடங்கள் குறித்தும் குறிப்பிட்டார் . இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் துஷான் விக்கிரமசூரிய இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் பன்முகத்தன்மை குறித்து ஒரு விளக்கவுரையை வழங்கினார். மேலும் தொற்றுநோயின் போது பாதுகாப்பான சுற்றுலாவுக்காக வைக்கப்பட்டுள்ள கோவிட்டிற்கு பின்னரான பாதுகாப்பு நெறிமுறைகளையும் கோடிட்டுக் காட்டினார்.
பௌத்த மற்றும் இந்து மதத் தலங்கள், கலாசார மரபுரிமைகள் மற்றும் சாகச சுற்றுலா என்பவற்றை உள்ளடக்கிய மத சுற்றுலா துறையானது இலங்கை மற்றும் நேபாளம் ஆகியவிரு இடங்களிலும் ஒரே மாதிரியான தன்மை கொண்ட ஈர்ப்புக்களை வழங்குவதுடன் தங்களது தனித்துவமான சிறப்பம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன. இலங்கையிலுள்ள யுனெஸ்கோவின் ஐந்து பாரம்பரிய தலங்கள் பௌத்த மதத்துடன் தொடர்புபட்ட அதே வேளையில், இளவரசர் சித்தார்த்த பிறந்த இடமாகிய லும்பினி நேபாளத்தில் உள்ளது. கலாசாரங்களினுடைய ஒத்த தன்மையானது இரு நாடுகளினது பிரஜைகள் ஒருவருக்கொருவர் விடுமுறை இலக்கினை அடைவதற்கு முறையீடு செய்கின்றது.
இலங்கை மற்றும் நேபாளத்தின் சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஊடாடும் வலைத்தளக் கருத்தரங்கில் பங்கேற்றனர். இலங்கை உள்வரும் சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO), இலங்கை சுற்றுலா விடுதி சங்கம் (THASL), சுற்றுலாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் (ASMET), இலங்கை பயண முகவர்கள் சங்கம் போன்றவை இலங்கை சுற்றுலாத் துறை சார்ந்த கண்ணோட்டத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டன. நேபாளத்திலிருந்து, நேபாள சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் (NATTA) மற்றும் நேபாளத்தின் பிரயாண முகவர்கள் சங்கம் ஆகியவை தங்கள் நுண்ணறிவு மற்றும் திட்டங்களை பகிர்ந்து கொண்டன.
சுற்றுலா செல்வதற்கான கட்டண தொகுப்புகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த இலக்கினை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான நடைமுறை பிரச்சினைகள் குறித்தும் சுற்றுலா சங்கங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.
வலைத்தளக் கருத்தரங்கில் உரையாற்றிய நேபாளத்திற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக மற்றும் கொழும்பிலுள்ள நேபாளத்திற்கான தூதரகப் பொறுப்பாளர் பிஷ்வாஷ் பட்டா ஆகியோர் இலங்கை மற்றும் நேபாளத்திற்கிடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தங்களது பூரண ஆதரவினை உறுதி செய்தனர்.
இலங்கை தூதரகம்
காத்மண்டு
2021 ஒக்டோபர் 08