கொழும்பில் உள்ள எகிப்தியத் தூதுவரின் விடைபெறுகை

கொழும்பில் உள்ள எகிப்தியத் தூதுவரின் விடைபெறுகை

எகிப்து அரபுக் குடியரசின் வெளிச்செல்லும் தூதுவர் ஹூசைன் அப்தெல்ஹமித் எல் சஹார்டி 2021 அக்டோபர் 01ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வெளிநாட்டு அமைச்சில் வைத்து பிரியாவிடை  நிமித்தம் சந்தித்தார்.

தனது பதவிக்காலத்திலான தூதுவர் சஹார்டியின் பங்களிப்புக்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ்,  இலங்கையும் செயல் உறுப்பினராக இருந்த அணிசேரா இயக்கத்தில் எகிப்து வகித்த பங்கை பாராட்டு உணர்வுடன் நினைவு கூர்ந்த அதே வேளையில், இன்றைய உலகில் அணிசேரா இயக்கத்தின் மதிப்புக்களின் பொருத்தப்பாட்டை ஒப்புக்கொண்டார்.

இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து குறிப்பிடுகையில், சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அமைச்சர், இந்தத் துறைகளில் இரு நாடுகளினதும் நிபுணத்துவத்தையும், எகிப்தின் தேயிலைப் பிரியர்களிடையே இலங்கைத் தேயிலை ஒரு முக்கிய இடத்தைப் பெறுவதனையும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற இருதரப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, எகிப்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட  இலங்கைத் தேயிலையின் அளவு அதிகரித்திருப்பதாகவும், ஏனைய ஆர்வமுள்ள பகுதிகளில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆராயப்படும் என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.

பொது விவாதத்தின் போது மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் வாய்வழி ரீதியான புதுப்பிப்பு குறித்த அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும்  முயற்சிகளை பாராட்டியமைக்காக, எகிப்து அரபுக் குடியரசின் அரசாங்கத்திற்கு அமைச்சர் பீரிஸ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் எகிப்தின் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தூதுவர், தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் ஒத்த சிந்தனையுள்ள நாடுகளாக இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

புதிய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடு அலுவலகம் மற்றும் தேசிய  ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகளைத் தொடர்வதானது, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மக்களை சென்றடைவதற்கும், நல்லிணக்கம் மற்றும் இடைநிலை நீதியைக் கொண்டுவருவதற்குமாக அரசாங்கம் பராமரிக்க விரும்பும் நிலையான தன்மையின் பிரதிபலிப்பாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கான ஒரு காரணியாக மனித உரிமைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் இந்த உண்மையான முயற்சிகள் கைவிடப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

அரசு சாரா நிறுவனங்களின் பிரதி உதவி அமைச்சராக கெய்ரோவில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள தூதுவர் சஹார்டிக்கு அமைச்சர் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 அக்டோபர் 06

Please follow and like us:

Close