2022 ஒக்டோபர் 11ஆந் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் சாவித்திரி ஐ. பானபொக்கே, கொரியக் குடியரசின் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்தார்.
நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதியை தூதுவர் சந்தித்தார். இந்தக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் பார்க் ஜினும் கலந்து கொண்டார். தூதுவர் பானபொக்கே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அன்பான வாழ்த்துக்களை ஜனாதிபதிக்குத் தெரிவித்ததுடன், கொரியக் குடியரசுடனான பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர்களுக்கு கொரியக் குடியரசில் வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்புக்களுக்காக அவர் ஜனாதிபதி யூனுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். கொரியக் குடியரசின் தூதுவரை வரவேற்ற ஜனாதிபதி யூன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்தார்.
தூதுவர் பானபொக்கே 2000ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்து கொண்டதுடன், பிரசல்ஸ், சிங்கப்பூர், வியன்னா மற்றும் நியூயோர்க் உட்பட வெளிநாடுகளில் உள்ள பல இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். அவர் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்தியக் கூட்டுறவு இராஜாங்க அமைச்சின் பணிப்பாளராகப் பணியாற்றினார்.
திருமதி. பானபொக்கே சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இரண்டாவது செயலாளர் சச்சினி டயஸ் மற்றும் அமைச்சர் ஆலோசகர் (வணிகம்) ரேகா மல்லிகாராச்சி ஆகியோரும் தூதுவருடன் விழாவிற்கு சென்றிருந்தனர்.
இலங்கைத் தூதரகம்,
சியோல்
2022 அக்டோபர் 13