கியூபத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

 கியூபத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான கியூபாவின் புதிய தூதுவர் மாண்புமிகு அண்ட்ரஸ் மார்செலோ கொன்சலஸ் கரிடோ வெளிநாட்டு  அமைச்சர் தினேஷ் குணவர்தனவை இன்று (29/07) வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். 2021 ஜூலை 22ஆந் திகதி தனது நற்சான்றுகளை அதிமேதகு ஜனாதிபதியிடம் கையளித்த தூதுவரை அமைச்சர் அன்புடன் வரவேற்றார்.

இலங்கைக்கு பலதரப்பட்ட அரங்குகளில், குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் நல்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக கியூப அரசாங்கத்துக்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பாராட்டுகளை வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். 2004ஆம் ஆண்டில் ஆசியாவில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து இலங்கைக்கு நல்கிய கணிசமான உதவிகளை  நினைவு கூர்ந்த  அவர், கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது ஹைட்டியில் சிக்கித் தவித்த இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகளுக்காக கியூப அரசாங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவித்தார். கியூபா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவு அமைச்சருக்கு தூதுவர் விளக்கினார்.

இலங்கை மற்றும் கியூபா ஆகியவற்றுக்கு இடையே அனைத்து மட்டங்களிலும் நிலவும் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையில் மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தி, தேங்காய் மற்றும் கரும்பு விவசாயம் மற்றும் ஸ்பானிய மொழிக் கற்கைகளில் மேலும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் உட்பட பலதரப்பட்ட இருதரப்பு  விடயங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் தூதுவருடன் கலந்துரையாடினார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூலை 29

Please follow and like us:

Close