கரையோர நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்து சமுத்திரத்தின் அனைத்து கடல்சார் பயனர்களின் நலன்களுக்கும் உணர்திறனளிக்கும், பிராந்திய பாதுகாப்பு சவால்களைத் தணிக்கும் பணிக்கான பாதுகாப்புக் கட்டமைப்பொன்றிற்கு வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க அழைப்பு விடுத்தார். பிராந்தியத் தளங்கள், நடைமுறை நடவடிக்கை இல்லாத நிலையில் அதிகரிக்கப்படக்கூடிய ஒரு சட்ட மற்றும் கொள்கைக் கட்டமைப்பை மாத்திரமே வழங்குகின்றன என்பதைக் கவனித்த அவர், பிராந்தியத்தின் இயக்கவியல் மற்றும் ஒத்துழைப்பில் மக்கள் அதிகபட்சமாக பயனடைந்து கொள்வதனை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் அதே வேளை, நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
2019 நவம்பர் 07ஆந் திகதி அபுதாபியில் நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 19வது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வெளிவிவகார செயலாளர் இந்த அவதானிப்புகளை மேற்கொண்டார். தென்னாபிரிக்காவிடமிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற ஐக்கிய அரபு இராச்சியம், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் மேம்பாட்டு நிதியை உருவாக்கும் இலக்கை 'புத்துயிர் பெறச் செய்வதற்கு' உறுதிபூண்டது.
தேசிய மற்றும் பிராந்திய செழிப்புக்கு ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான கடல் சூழலின் முக்கியத்துவத்தை இலங்கை தனது நீண்ட கால இலக்குகளில் ஒன்றாக உணர்ந்திருப்பதாக திரு. ஆரியசிங்க தெரிவித்தார். 1971 ஆம் ஆண்டு ஐ.நா. இந்து சமுத்திர அமைதி வலய முன்மொழிவு, கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் சாசனத்தை ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்த 1973 ஆம் ஆண்டு இலங்கையின் கடல் சட்டம் குறித்த மூன்றாவது ஐ.நா. மாநாட்டிற்கான இலங்கையின் தலைமைத்துவம், மற்றும் 1985 ஜூலை மாதத்தில் கொழும்பில் நடைபெற்ற புதிய சமுத்திர ஆட்சியின் சூழலிலான கடல் விவகாரங்களில் இந்து சமுத்திர பொருளாதார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றிய மாநாடு ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.
2018 முதல், இலங்கை கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றதிலிருந்து, பிரிவினைவாத பயங்கரவாத மோதலின் போதான ஏராளமான கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அனுபவத்தைப் பெற்றுள்ளது. 2019 ஆகஸ்ட்டில் கொழும்பில் நடைபெற்ற குழுவின் முதலாவது கூட்டம், கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு விடயத்தில், முக்கியமாக, தற்போதுள்ள கடல்சார் சட்ட நீதித்துறை, போதைப்பொருள் கடத்தல், நாடுகடந்த குற்றம் மற்றும் உலகளாவிய மீன்பிடித் தொழில்துறை ஆகியவற்றிலான கடல்சார் பாதுகாப்பு சவால்களை உருவாக்கும் இந்து சமுத்திர கடல்சார் குற்றச் செயல்களை சமாளிப்பதில் கவனம் செலுத்தி, உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட முன்னுரிமைகள் பற்றி விவாதிப்பதற்கான ஒரு தளத்தை வழங்கியது. 54 குறுகிய கால, நடப்பு மற்றும் நீண்ட கால திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்குழுவின் (WGMSS) வரைவுப் பணித் திட்டம் கொழும்பு கூட்டத்தின்போது மேலும் இறுதிப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார். இந்து சமுத்திர விளிம்பு சங்க செயலகத்தின் உதவியுடன் 16 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னணி நாடாக உறுப்பு நாடுகள் ஏற்கெனவே பொறுப்பேற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு குறித்த இலங்கையின் அர்ப்பணிப்பு இந்து சமுத்திர விளிம்பு சங்கத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், 2018 அக்டோபரில் இடம்பெற்ற 'இந்து சமுத்திரம்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல்' என்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 40 உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 300 சிரேஷ்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைத்து வந்த தடம் 1.5 உரையாடலை மேற்கோள் காட்டினார். பங்கேற்கும் நாடுகளால் 'புரிந்துணர்வு அறிக்கையை' உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள 'இந்து சமுத்திரம்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல்' என்ற தடம் 1 அமைச்சர்கள் மட்ட மாநாட்டை அடுத்த வருடம் கூட்டுவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.
பொருளாதார விவகாரங்கள் பிரிவின் மேலதிக செயலாளர் திரு. பி.எம். அம்சா மற்றும் சமுத்திர விவகாரங்கள் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் திருமதி. டிலானி வீரக்கோன் ஆகியோர் வெளிவிவகார செயலாளருடன் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் இடம்பெற்றதுடன், அதற்கு முன்னரான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்திலும் பங்கேற்றனர்.
அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமொரோஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகாஸ்கார், மலேசியா, மொரீஷியஸ், மாலைதீவுகள், மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, தன்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யெமன் ஆகிய நாடுகளை இந்து சமுத்திர விளிம்பு சங்கம் உள்ளடக்கியுள்ளது. தற்போது, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கலந்துரையாடல் பங்காளர்களாக உள்ளன.
Full text of the speech could be downloaded via: http://www.mfa.gov.lk/wp-content/uploads/2019/11/IORA-Speech-1.pdf
-----------------------------------