கனடாவின் ஆளுநர் நாயகத்திடம் உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

 கனடாவின் ஆளுநர் நாயகத்திடம் உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன, 2021 டிசம்பர் 07ஆந் திகதி ஒட்டாவாவிலுள்ள ரைடோ மண்டபத்தில் நடைபெற்ற விழாவில்,  கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி மே சைமனிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார். இலங்கை, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தூதுவர்கள் தமது நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் இந் நிகழ்வில், கனடாவின் வெளிவிவகார, வர்த்தக மற்றும் அபிவிருத்தித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் தலைவரின் வரவேற்பு உரையைத் தொடர்ந்து, கனடாவின் நெறிமுறைத் தலைவர்  ஸ்டீவர்ட் வீலர் நான்கு தூதுவர்களையும் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து நற்சான்றிதழ்கள்கள் கையளிக்கப்பட்டன.

தனது வரவேற்பு உரையில், நான்கு நாடுகளுக்கும் கனடாவிற்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இருதரப்பு உறவுகளை ஆளுநர் நாயகம் சுட்டிக் காட்டினார். இலங்கை குறித்து பேசுகையில், மக்களுக்கிடையிலான வலுவான உறவுகள், கனடாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள், கூட்டுப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தித் திட்டங்கள்  குறித்து அவர் குறிப்பிட்டார்.

நற்சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் நாயகத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் குறித்து ஆளுநர் நாயகத்திற்கு உயர்ஸ்தானிகர் நவரத்ன விளக்கமளித்தார். நல்லிணக்க முயற்சிகளைப் புதுப்பித்தல், இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தி, அதிகரித்தல் மற்றும்  இலங்கையில் கனேடிய சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியன கனடாவிலான தனது முன்னுரிமைகளில் உள்ளடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

கனடாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், உயர்ஸ்தானிகர் நவரத்ன, 40க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சமூக ஈடுபாடு கொண்ட பௌத்தப் பயிற்சியாளர்கள் மற்றும் அமைப்புக்களின் வலையமைப்பை ஆதரித்து, தற்போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மதங்களுக்கு இடையேயான அமைப்புக்களை ஒன்றிணைத்து செயற்படுத்தும் இரண்டு முன்முயற்சிகளை வழிநடத்தும் பேங்கொக்கைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச ஈடுபாட்டுப் பௌத்தர்களின் வலையமைப்பின் தலைவராக செயற்றபட்டார்.  இந்த முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் பௌத்த-முஸ்லிம் உரையாடல் அமைக்கப்பட்டது. அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராகவும், நிலையான விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, நிறுவன அபிவிருத்தி, நுண்கடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உளவியல் ஆதரவு மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கிராமப்புற சேவைகளை வழங்கும் சமூக அடிப்படையிலான அமைப்பான இலங்கை சேவாலங்கா அறக்கட்டளையின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் இருந்தார்.

இவருக்கு திருமணமாகி, மூன்று மகள்கள் உள்ளனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

ஒட்டாவா

2021 டிசம்பர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close