கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐயோரா பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தை இலங்கை முன்னெடுப்பு

 கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐயோரா பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தை இலங்கை முன்னெடுப்பு

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் இலங்கையின் தலைமையில் 2023 மார்ச் 20ஆந் திகதி 23 ஐயோரா உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது. ஐயோரா செயலகத்தின் பொதுச் செயலாளர் சல்மான் அல்  ஃபரிசி மற்றும் செயலகத்தின் பிரதிநிதிகள் மொரிஷியஸில் உள்ள ஐயோரா செயலகத்தில் இருந்து இணையவழி மெய்நிகர் முறையில் பங்கேற்றனர்.

கூட்டத்தை ஆரம்பித்து வைத்த வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை  மேம்படுத்துவதற்கான ஒரு மன்றமாக ஐயோராவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்புத் துறையில், கொழும்பு பணிக்குழுவில் கலந்துரையாடப்பட்ட தலைப்பில், இந்து சமுத்திரத்தின் வளர்ந்து வரும்  முக்கியத்துவத்தின் கீழ், சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புக்கள் குறித்து ஐயோரா உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணர்வு அவசியம் என வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர விளிம்புப் பகுதியானது, கடற்கொள்ளை, கடலில் ஆயுதமேந்திய கொள்ளைகள், ஆட்கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல், அத்துடன் வனவிலங்குகளை சட்டவிரோதமாகக் கடத்தல், சட்டவிரோதமான, முறைப்பாடளிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், கடல் மாசுபாடு,  கடல் வளங்களை அதிகமாக சுரண்டுதல் மற்றும் அபாயகரமான பொருட்களின் சட்டவிரோதப் போக்குவரத்து போன்ற நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்  உட்பட பல பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற காவல் மற்றும் பாதுகாப்பு சார் சவால்களை எதிர்கொள்கின்றது. காலநிலை மாற்றம் மற்றும் கடல் பல்லுயிர் அழிவு ஆகியவை இந்து சமுத்திரத்தின் காவல் மற்றும் பாதுகாப்பிற்கு சவால் விடுகின்றன. பௌதீக ரீதியாகவும், டிஜிட்டல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் பாதிக்கப்படக்கூடிய கடலுடன் இணைக்கப்பட்டுள்ள முக்கியமான உட்கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐயோராவின் தலைவராக இலங்கை பொறுப்பேற்கும் என வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன சுட்டிக்காட்டினார். இந்தப் பாத்திரத்தில் இலங்கை தற்போதைய தலைவராக பங்களாதேஷ் மற்றும் கடந்த தலைவராக ஐக்கிய அரபு இராச்சியம்  ஆற்றிய முக்கிய பணியைக் கட்டியெழுப்பும். ஐயோரா உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அதன் உறுப்பு நாடுகளின் மற்றும் அதற்கு அப்பால் உள்ள செழுமைக்காக பாதுகாப்பான, வளமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி இட்டுச்செல்லும் என்பதில் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இணையவழி மெய்நிகர் முறையில் இணைந்த கடல்சார் ஐயோராவின் பொதுச் செயலாளர் சல்மான் அல் ஃபரிசி, பிராந்தியத்தில் காவல் மற்றும் பாதுகாப்பு ஒரு  முக்கிய அபிவிருத்திப் பிரச்சினையாக இருப்பதால், பிராந்தியத்தில் பொதுவான காவல் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளைத் தேடுவதற்கு உறுப்பு நாடுகள் தமது உரையாடலையும் முயற்சிகளையும் தொடர்ந்தும் வலுப்படுத்துவது அவசியமாகும் என எடுத்துரைத்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஐயோரா உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் பங்காளர் நாடுகளின் தூதரகத் தலைவர்கள், இலங்கை கடற்படைத் தளபதி, கடற்றொழில் அமைச்சு, இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, வணிகக் கப்பல் செயலகம், இடர் முகாமைத்துவ மையம் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைகடகுழு உள்ளிட்ட தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம், உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டம் மற்றும் மெக்ஸ் பிளேன்க் அறக்கட்டளையின் அதிகாரிகள் மற்றும் ஜிஸ் இன் பிரதிநிதிகள் ஆகியோர் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமோரோஸ், பிரான்ஸ், இந்தியா,  இந்தோனேஷியா, ஈரான், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலைதீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, தன்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எமன் ஆகிய ஐயோரா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சர்வதேச சமாதானம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மெக்ஸ் பிளேங்க் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்புக்கான கூட்டாண்மை' என்ற மூன்று நாள் பட்டறை, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு பணிக்குழுவின் பக்க அம்சமாக  எதிர்வரும் மார்ச் 21 முதல் 23 வரை நடைபெறும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மார்ச் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close