அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்தை அடுத்து, நோர்வே இராச்சியத்தின் ஒஸ்லோ, ஈராக் குடியரசின் பாக்தாத் ஆகியவற்றில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் அவுஸ்திரேலியா பொதுநலவாயத்தின் சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஆகியவற்றை 2022 ஏப்ரல் 30 முதல் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு தூதரகங்கள் மற்றும் பணிமனைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பான தீர்மானமானது, கவனமாக ஆலோசித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது. இது தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாடுகளின் பின்னணியில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திரப் பிரதிநிதித்துவத்தின் பொது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும்.
இரண்டு வதிவிடத் தூதரகங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, சுவீடனின் ஸ்டொக்ஹோமில் உள்ள இலங்கைத் தூதுவருக்கு நோர்வேக்கும், ஐக்கிய அரபு இராச்சியம், அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவருக்கு ஈராக்கிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் அளிக்கப்படும். சிட்னியில் உள்ள துணைத் தூதரகத்தின் தூதரக அதிகார வரம்பு அவுஸ்திரேலியாவின் கன்பெராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு இணைக்கப்படும்.
நோர்வே, ஈராக் மற்றும் சிட்னியின் தூதரக அதிகார வரம்பிற்குள் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளின் தூதரகம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் நிவர்த்தி செய்வதற்கும், மேலே விவரிக்கப்பட்டுள்ள புதிய அங்கீகாரம் / ஏற்பாட்டின் மூலமாகவும் அத்துடன் நோர்வே, ஒஸ்லோ மற்றும் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள இலங்கையின் அந்தந்த துணைத் தூதரகங்களின் மூலமாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாற்ற செயன்முறையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கவனமாகக் கண்காணிக்கும்.
தற்போதைய சூழலில் தற்காலிக நடவடிக்கையாக எடுக்கப்பட்ட நோர்வே மற்றும் ஈராக்கில் உள்ள வதிவிடத் தூதரகங்களை மூடும் தீர்மானமானது, உகந்த அளவில் நட்புறவு மற்றும் நல்லுறவில் பேணப்படும் இரு நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஏப்ரல் 05