ஐயோராவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில் கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகளை மாசு சார்ந்த பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு

ஐயோராவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில் கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகளை மாசு சார்ந்த பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு

டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகளை மாசு சார்ந்த பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்.

பிளாஸ்டிக் நார்கள், அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களால் 2021 மே மாதம் ஏற்பட்ட எம்.வி.-எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தைக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், சுற்றாடல் பாதிப்பு இலங்கையில் மட்டும் உணரப்படவில்லை, மாறாக இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட கடல் சூழலிலும் நீண்டகால விளைவுகள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் பீரிஸ், சுற்றுச்சூழலுக்கு மாத்திரமன்றி வாழ்வாதாரத்துக்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய அனர்த்தங்களைத் தடுக்கக்கூடிய அல்லது குறைக்கக்கூடிய கூட்டு நடவடிக்கையை முன்மொழிவதில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இலங்கை முன்னிலை வகிக்கும் எனக் குறிப்பிட்டார். இதுபோன்ற  சம்பவங்களின் விளைவுகளின் அளவைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் சேதம் மற்றும் இழப்புக்களை மீட்டெடுப்பதற்காக நிதியமொன்றை நிறுவுவதற்கு உலக சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். அனர்த்தப் பேரழிவின் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணிப்பதற்காக ஆதரவு அளித்த அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

ஐயோராவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டமைக்காக பங்களாதேஷ் அரசாங்கத்தை வாழ்த்திய வெளிநாட்டு அமைச்சர்  பீரிஸ், தற்போதைய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு முக்கியமானதாக இருக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐயோராவின் தலைமைத்துவத்தை வகிக்கும் பங்களாதேஷின் மீது இலங்கை தனது நம்பிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தின் பொறுப்புக் காலத்தில் ஐயோராவை வழிநடத்துவதில் அதன் சிறந்த பணி மற்றும் வழிநடத்தலுக்காக அவர் நன்றிகளைத் தெரிவித்தார். ட்ரொய்காவின் உறுப்பினராக கூட்டு முடிவுகளை செழுமைப்படுத்திய கடந்த தலைமையான தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கும், செயலாளர் நாயகம் இல்லாத தருணத்தில் அயராது உழைத்த பதில் பொதுச்செயலாளர் மற்றும் அவரது ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

பங்களாதேஷ் தனது தலைமைத்துவக் காலத்தில் தெரிவுசெய்துள்ள 'இந்து சமுத்திரத்தின் வாய்ப்புக்களை உள்ளடக்கிய அபிவிருத்திக்கு நிலையான முறையில் பயன்படுத்துதல்' என்ற தொனிப்பொருள் குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர், இந்து சமுத்திரம் 70 மில்லியன் சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட மூன்றாவது பெரிய சமுத்திரமாவதுடன், இந்து சமுத்திரத்தின் எல்லையில் கடல் வளங்கள் மீதான போட்டி அதிகரித்து வருவதை உலகம் காண்பதாகத் தெரிவித்தார். பிராந்தியத்தில்  உள்ள நாடுகள் ஒத்துழைப்பதற்கும் அமைதியான முறையில் ஈடுபடுவதற்குமாக உரிய வாய்ப்புக்களை மிகவும் நிலையான முறையில் பயன்படுத்துவதற்கு வழிகாட்டக்கூடிய பிராந்திய வழிமுறைகளின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். நிலையான கடல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான இந்த முக்கிய கருப்பொருள் பகுதியில் ஐயோரா விரிவானதொரு பார்வையில் பணியாற்றி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலைநோக்கு அறிக்கையான 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை'  குறித்து குறிப்பிட்ட அமைச்சர், நீலப் பசுமைப் பொருளாதாரம் என்ற கருத்தின் கீழ் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதே அரசாங்கக் கொள்கையின் அடித்தளமாகும் எனக் குறிப்பிட்டார். ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் (சி.ஓ.பி.26) ஜனாதிபதி ஆற்றிய உரையைக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கையின் தேசியக் கொள்கை கட்டமைப்பானது சுற்றுச்சூழல் ஒருமைப்பாடு தொடர்பான புத்தபெருமானின் போதனைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது பெரும் மதிப்பை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கோவிட்-19 குறித்து உரையாற்றிய அமைச்சர், சுகாதாரப் பாதிப்புக்கள் மற்றும் பொருளாதாரங்களின் பேரழிவிற்கு, குறிப்பாக  சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட பேரழிவிற்கு வழிவகுத்த கோவிட்-19 தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து, முழு மனிதகுலத்திற்கும் முன்னோடியில்லாத இந்த சவால்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த அக்கறையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்காக இலங்கை ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் கதவுகளைத் திறந்துள்ளதாகவும், அதேவேளையில் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மகத்தான ஆற்றலை சுற்றுலா  கொண்டுள்ளதுடன், உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் அது பங்களிப்புச் செய்வதனை அவர் ஒப்புக்கொண்டார். இந்த தொற்றுநோயால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும், ஆற்றல்மிக்க வழிகளில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் உலகளாவிய சமூகம் ஒன்று சேரும் என்பதில் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐயோராவின் புதிய உரையாடல் கூட்டாளராக ரஷ்யக் கூட்டமைப்பை வரவேற்ற வெளிநாட்டு அமைச்சர், பிராந்தியத்தின் சவால்களை  எதிர்கொள்வதற்கும், பகிரப்பட்ட முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்குமான ஒத்துழைப்பை தொடர்ந்தும் ஆழப்படுத்துமாறு உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்கள் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற 23வது ஐயோரா சிரேஷ்ட அதிகாரிகளின் குழுக் கூட்டத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் (பல்தரப்பு) பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் பானு  ஜான் வழிநடத்தினார். 21வது அமைச்சர்கள் சபைக் கூட்டத்திற்கான தூதுக்குழுவில் டாக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எஸ்.டி.எஸ். செனவிரத்ன, பொருளாதார அலுவல்கள் (பல்தரப்பு) பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் பானு ஜான், பிரதி உயர்ஸ்தானிகர் ருவந்தி டெல்பிட்டிய மற்றும் வெளிநாட்டு அமைச்சரின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமதார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close