ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது அமர்வின் போது இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு

 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது அமர்வின் போது இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு

நியூயோர்க்கில் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் மாரிஸ் பெய்னைச் சந்தித் வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பரந்த அளவிலான பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசனின் வாழ்த்துக்களை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரிடம் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பெய்ன், இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்ட கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் பிரதமர் தனிப்பட்ட முறையில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தொழிற்கல்வியில் அவுஸ்திரேலியாவின் அனுபவத்தைக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இந்தப் பகுதியில் உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை மிகுந்த ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டார். ஆட்கடத்தல் தொடர்பாக குறிப்பிடுகையில், இது ஒரு மனிதாபிமான துயரம் என்றும், இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதில் இலங்கை அரசாங்கம் கணிசமான பங்கைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியிலும் நல்லிணக்கத்திலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அமைச்சர் பெய்னிடம் தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும்  தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான முன்னேற்றங்கள், தற்போதைய நிலவரத்தை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்தல் மற்றும் செயன்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை அடையாளம் காணுதல் போன்றன குறித்தும் அவர் விரிவாக விவரித்தார்.

உள்ளூர் நிறுவனங்கள் அவற்றின் ஆணைகளை நிறைவேற்றுவதற்கான இடத்தையும் வாய்ப்பையும் அளிப்பது அவசியம் என்றும், இந்தப் பணியை மீறும் தற்காலிக வெளிப்புறப் பொறிமுறையொன்றை நிறுவுவது தேவையற்றதும், தீங்கு விளைவிக்கவல்லதும் ஆகும் என்றும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணான வகையில், இலங்கையைத் தேர்ந்தெடுத்து இலக்கு வைக்கும் ஒரு பொறிமுறையைக் கொண்டிருப்பது  முதிர்ச்சியற்றதும், பொருத்தமற்றதுமாகும்.

அவுஸ்திரேலியாவில் மிகவும் அருமையான மற்றும் குறிப்பிடத்தக்க புலம்பெயர்ந்தோர் இருப்பதாக அமைச்சர்  பெய்ன் குறிப்பிட்டார். அமைச்சர் பீரிஸால் கோடிட்டுக் காட்டப்பட்ட பகுதிகளில், குறிப்பாக உளவுத்துறைப் பகிர்வு மற்றும் கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பை அவர் வரவேற்றார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான அன்பான மற்றும் நட்புறவான உறவை மேலும் மேம்படுத்துவதற்காக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 செப்டம்பர் 21

Please follow and like us:

Close