அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 பிப்ரவரி 04ஆந் திகதி அபுதாபியில் உள்ள சான்செரி வளாகத்தில் உத்தியோகபூர்வ விழாவை நடாத்தி இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சுதந்திர தினக் கொண்டாட்டம் தூதரக ஊழியர்கள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான இலங்கை வெளிநாட்டினரின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் மல்ராஜ் டி சில்வாவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பாரம்பரிய மகுல்பேரா மேளம் இசைக்கப்பட்டதுடன் விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தாய்நாட்டின் சுதந்திரம், ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக தமது வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்களை அர்ப்பணித்த இலங்கைப் போர்வீரர்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
பாரம்பரிய கலாச்சார சடங்குகளைப் பின்பற்றி, பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்கப் பாதிரியார்கள் இணையவழியில் சமய அனுஷ்டானங்களை நடாத்தி தாய்நாட்டிற்கும், அதன் தலைவர்களுக்கும் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினர்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரின் சுதந்திர தினச் செய்திகள் தூதரக ஊழியர்களால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.
சுருக்கமான கருத்துக்களை வழங்கிய தூதுவர் மல்ராஜ் டி சில்வா, பங்கேற்பாளர்களை வரவேற்றதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரச்சாரத்தில் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கோவிட்-19 காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களும் தமது ஆதரவை வழங்குமாறும் தூதுவர் கேட்டுக்கொண்டார். 300,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு பாதுகாப்பான இரண்டாவது வீட்டை உருவாக்கியதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு அவர் விஷேட நன்றிகளைத் தெரிவித்தார்.
அபுதாபியில் வசிக்கும் இலங்கை மருத்துவர் அருண ரபெல் தனது உரையில், கோவிட்-19 வைரஸின் புதிய போக்குகள், முழுமையாக தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் உங்களையும் மற்றவர்களையும் வைரஸிலிருந்து பாதுகாக்கும் சில நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் பகிர்ந்துள்ளார்.
தூதுவராலயத்தின் ஆலோசகர் மேதாவி பீரிஸ் நன்றியுரையை ஆற்றிய போது, தாய்நாட்டிற்கும் இலங்கையின் தேசிய மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் தூதரகத்துடன் நேரிலும் இணையத்தளத்திலும் இணைந்து கொண்டமைக்காக பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இலங்கையின் பாரம்பரிய உணவு விருந்துபசாரத்துடன் விழா நிறைவுற்றது.
இலங்கைத் தூதரகம்,
அபுதாபி
2022 பிப்ரவரி 14