எஸ்டோனியா குடியரசிற்கான இலங்கையின் தூதுவராக தர்ஷன எம். பெரேராவை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட நற்சான்றிதழ் கடிதம் 2021 டிசம்பர் 14ஆந் திகதி எஸ்டோனியாவின் தாலினில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து எஸ்தோனியா ஜனாதிபதி அலார் காரிஸிடம் கையளிக்கப்பட்டது. இலங்கைத் தூதுவராகப் பதவியேற்ற பெரேரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துக்களையும், எஸ்டோனிய ஜனாதிபதி அண்மையில் ஜனாதிபதியாகப் பதவியேற்றமைக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி அலர் காரிஸ், அவரது வாழ்த்துக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
தூதுவருக்கு 'கத்ரியோர்க்' முற்றத்தில் வைத்து சம்பிரதாய மரியாதை அளிக்கப்பட்டது. இலங்கை மற்றும் எஸ்டோனியா ஆகிய இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில், கலந்துகொண்ட இராணுவ இசைக்குழுவினர் தேசிய கீதங்களை இசைத்தனர்.
அதனைத் தொடர்ந்து எஸ்டோனி ஜனாதிபதி அலார் காரிஸுடனான உரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவின் முக்கியமான சந்தர்ப்பம் நினைவுகூரப்பட்டது. எஸ்டோனியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து குறிப்பாக அரசியல் உறவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் பொருட்களில் வர்த்தகம் மற்றும் வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துதல் போன்ற பொருளாதாரத் துறைகள் தொடர்பான கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் நாயகம், நெறிமுறைத் தலைவர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளர் (ஆசியா மற்றும் பசிபிக்), மின் ஆளுமை அகடமியின் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் எஸ்டோனிய வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடனான தூதுவரின் உரையாடல்களின் போது இந்தப் பகுதிகள் குறித்து மேலும் விரிவாக ஆராயப்பட்டன.
ஸ்வீடனில் வதியும் தூதுவர் தர்ஷன எம். பெரேரா தாலினிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
இலங்கைத் தூதரகம்,
ஸ்வீடன்
2021 டிசம்பர் 21