2021 செப்டம்பர் 21ஆந் திகதி முதல் 24ஆந் திகதி வரை ஐ.இ.சி. 'க்ரோகஸ் எக்ஸ்போ' வில் நடைபெற்ற 'உலக உணவு மொஸ்கோ 2021' 30வது பெருவிழாக் கண்காட்சியில் இலங்கை தேயிலை சபையின் ஆதரவுடன் ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தேயிலை ஊக்குவிப்புப் பிரிவு பங்கேற்றது. சிலோன் டீ லேண்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் கௌசல்யா தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஆகியன தூதரகத்துடன் இணைந்து கண்காட்சியில் பங்கேற்றன.
பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட சிலோன் டீ தொகுதியானது, சிலோன் டீ பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்த்தது. இலங்கையில் உள்ள ஏழு தனித்துவமான பிராந்தியங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கைத் தேயிலையைக் கொண்ட சூடான தேநீர் கோப்பையுடன் கூடிய வகையில் இந்தத் தொகுதி அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து இலங்கையர்களுக்கும் பாரம்பரிய இலங்கை ஒசரி உடையணிந்த ரஷ்ய தேநீர் ஊக்குவிப்பாளர்களால் ஒரு கோப்பை புதிய இலங்கைத் தேநீர் வழங்கப்பட்டது.
இலங்கைத் தேயிலைத் தொகுதி ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஏ. ருவினி முனிதாச, மூன்றாம் செயலாளர் (தேயிலை ஊக்குவிப்பு) திரு. திஷான் டி சில்வா மற்றும் இலங்கைத் தூதரக ஊழியர்களால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
'உலக உணவு மொஸ்கோ' ரஷ்யாவில் மிகப்பெரிய இலையுதிர் உணவுக் கண்காட்சியாக விளங்குவதுடன், இது பரவலான மலிவான மற்றும் உயர்தர உணவுப் பொருட்கள் கொண்டதாகும். இந்த ஆண்டு, 600 க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் வெளிநாட்டு உணவு மற்றும் பான உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்த்தர்கள் தமது சிறந்த புதிய தயாரிப்புக்களை உணவு சந்தை நிபுனர் பார்வையாளர்களுக்கு வழங்கினர்.
முதன்முறையாக, 30 உலக நாடுகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்த்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 110 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 'உலக உணவு மொஸ்கோ 2021' இல் தமது உற்பத்திகளைக் காட்சிப்படுத்தியதுடன், சுமார் 15 நாடுகள் இலங்கை உட்பட தேசியக் கூடாரங்களை ஏற்பாடு செய்தன. உள்நாட்டுக் கண்காட்சி ரஷ்யாவின் 59 பிராந்தியங்களைச் சேர்ந்த நிறுவனங்களால் வழங்கப்பட்டது.
இணையம்: https://world-food.ru/Home
இலங்கைத் தூதரகம்,
மொஸ்கோ
2021 செப்டம்பர் 30