உயர் ஸ்தானிகர் கனநாதன் உகாண்டாவில் நற்சான்றிதழ்களை கையளிப்பு

உயர் ஸ்தானிகர் கனநாதன் உகாண்டாவில் நற்சான்றிதழ்களை கையளிப்பு

உகாண்டாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கபட்டுள்ள உயர் ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் தனது நற்சான்றிதழ்களை உகாண்டாவின் ஜனாதிபதியான அதி மேதகு யொவெரி ககுடா முசெவெனி அவர்களிடம் 2021 மே 06 ஆந் திகதி உகாண்டாவின் என்டெபேயில் உள்ள அரச மாளிகையில் வைத்து கையளித்தார். உத்தியோகபூர்வ விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின் போது, ஜனாதிபதியும் உயர் ஸ்தானிகரும் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் நிலை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, சமீபத்திய ஆண்டுகளில் இலங்கைக்கும் உகாண்டாவிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஒப்புக் கொண்டனர். குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் போன்ற ஒத்துழைப்பின் பல புதிய துறைகளில் இருதரப்பு உறவுகளின் உண்மையான திறனை அடைந்து கொள்வதற்கான அவசியத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் உகாண்டா இலங்கையுடன் அனுபவித்த நெருக்கமான உறவுகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி முசெவெனி, இருதரப்பு உறவை புதிய உயரத்திற்கு உயர்த்துவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இருதரப்பு பொருளாதார உறவுகளை அதிகரிப்பதற்கு இந்த முயற்சிகள் அனைத்தும் பின்பற்றப்படல் வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பரஸ்பர பொருளாதார நலன்களுக்காக ஆபிரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக உயர் ஸ்தானிகர் கனநாதன் ஜனாதிபதி முசெவெனிக்கு விளக்கினார். ஆபிரிக்க ஒன்றியத்தில் ஒரு பார்வையாளர் நாடென்ற வகையில், நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்காக ஆபிரிக்க உலகை அணுகும் நோக்கில், இலங்கை ஆபிரிக்க நாடுகளுடனும், கிழக்கு மற்றும் தென்னாபிரிக்காவிற்கான பொதுவான சந்தை, மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், தென்னாபிரிக்க அபிவிருத்தி சமூகம், மத்திய ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் போன்ற துணை பிராந்திய அமைப்புக்களுடனும் தொடர்புகொள்வதற்கான ஒரு தளமாக இதைப் பயன்படுத்துவதற்கான முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடர்பில் குறிப்பிடுகையில், இலங்கையின் தேசிய விமானமான ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தனது முதலாவது நேரடி விமான இணைப்பை நைரோபியுடன் 2021 ஏப்ரல் 22 ஆந் திகதி தொடங்கியுள்ளதாகம், மேலும் உகாண்டாவிலிருந்து இலங்கை வரையிலான பயணிகளுக்கு நேரடி நன்மையை வழங்கும் ஒரு இடைநிலை ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் உகாண்டா எயார்லைன்ஸ் ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விமான ஏற்பாடுகள் ஒரு சிறந்த செய்தியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள நாடுகள், தமது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக இந்த வசதிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்குதல் வேண்டும் எனக் குறிப்பிட்டார். இலங்கைக்கும் உகாண்டாவிற்கும் இடையிலான சுற்றுலா மேம்பாட்டிற்கு வசதியாக இரு நாடுகளும் விமான இணைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

உகாண்டாவில் சிறிய நீரியல் வளத் திட்டங்களின் முன்னோடிகளான இந்தத் துறையில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் இலங்கை முதலீட்டாளர்களின் முதலீடுகளைப் பாராட்டிய ஜனாதிபதி முசெவெனி, உகாண்டாவில் அந்நிய நேரடி முதலீட்டிற்காக வழங்கப்பட்டுள்ள இலாபகரமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அனுபவிக்கும் வகையில், விவசாயம், உற்பத்தி மற்றும் ஏனைய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக அதிகமான இலங்கை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சந்திப்பின் நிறைவில், இலங்கைக்கும் உகாண்டாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் வெற்றிகளை எய்திக் கொள்வதற்காக உயர் ஸ்தானிகருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, உகாண்டா அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தினார்.

உகாண்டாவிற்கான இலங்கையின் வதிவிட உயர் ஸ்தானிகராக 2013 - 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணியாற்றிய உயர் ஸ்தானிகர் கனநாதன், இரண்டாவது முறையாக தனது நற்சான்றிதழ்களை கம்பாலாவில் வைத்து ஜனாதிபதி முசெவெனியிடம் கையளித்துள்ளார். உயர் ஸ்தானிகர் கனநாதன் 2020 ஆம் ஆண்டில் கென்யா உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படும் வரை, உகாண்டா உட்பட 8 அண்டை நாடுகளுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற உகாண்டாவிற்கான இலங்கையின் கௌரவ தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். உயர் ஸ்தானிகர் கனநாதனின் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் உள்ள பரந்த அறிவையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு, 2020 ஜனவரியில் இலங்கைப் பிரதமரின் ஆபிரிக்காவுக்கான சிறப்புப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.

உயர் ஸ்தானிகர் கனநாதன் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களுக்கான நிறுவகத்தில் தனது தொழில்முறைத் தகைமைகளைப் பெற்றிருப்பதுடன், புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
நைரோபி

2021 மே 08

 

 

 

 

Please follow and like us:

Close