உயர்ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரை சந்தித்து மேலதிக ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்

உயர்ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரை சந்தித்து மேலதிக ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்

இன்று (15) புது தில்லியில் உள்ள இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ் குமார் சிங்கைச் சந்தித்த இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மற்றும் எரிசக்தி துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பழமையான நெருங்கிய உறவுகளை நினைவுகூர்ந்த அமைச்சர் சிங், உயர்ஸ்தானிகர் மொரகொடவை அன்புடன் வரவேற்றார். இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

இத்துறையில் நீண்ட கால மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தும் குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சூழலில், ஜூன் 2021ல் இந்தியாவால் நீடிக்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியின் கீழ் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் ஸ்தாபக மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட வீடுகள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்களுக்கான மேற்கூரையிலான சூரிய ஒளிமின்னழுத்த அமைப்புகள் போன்ற இலங்கையில் சூரிய ஆற்றல் துறையில் பல்வேறு திட்டங்களுக்கு இந்தியாவின் எக்சிம் வங்கியின் மூலம் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட உத்தேச சம்பூர் சூரிய மின்னுற்பத்தி நிலையம் குறித்தும் இதன் போது மின்துறை அமைச்சர் மற்றும் உயர்ஸ்தானிகரினால் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் மன்னாரில் காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இந்திய தனியார் துறை முதலீடுகள் தொடர்பாக அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் அவர்கள் வரவேற்றனர்.

உயர்ஸ்தானிகர் மொரகொட 'இந்தியாவில் இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களுக்கான  ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயம் 2021ஃ2023' என்ற தனது கொள்கைச் வரைபடத்தின் பிரதியை அமைச்சர் சிங்கிடம் வழங்கினார். மின்சாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க பொருட்களுக்கு அதிக இடவசதியை வழங்கவும் இந்த மூலோபாயம் கருதுகிறது.

அமைச்சர் ராஜ் குமார் சிங் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், இந்திய நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக செயற்பட்டதுடன், 2011 முதல் 2013 வரை இந்தியாவின் உள்துறை செயலாளராகவும் பணியாற்றினார். அவர் 2014 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

2022 மார்ச் 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close