உயர்மட்ட ஓமானி வர்த்தக பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான ஆக்கபூர்வமான  விஜயத்தை நிறைவு

 உயர்மட்ட ஓமானி வர்த்தக பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான ஆக்கபூர்வமான  விஜயத்தை நிறைவு

2022 மார்ச் 05 முதல் 09 வரை ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஓமான் வர்த்தக மற்றும் தொழில்துறையிலிருந்து 17 உறுப்பினர்களைக் கொண்ட  உயர்மட்ட ஓமானி வணிகக் குழுவின் முதல் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓமான் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தலைவர் பொறியியலாளர் ரெதா பின் ஜுமா அல் சலேஹ் தலைமையில் உயர்மட்ட வணிகக் குழு ஓமானின் முழு தனியார் துறையின் ஒரே பிரதிநிதியாக உள்ளது. ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் இலங்கையில்  உள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தூதுக்குழுவை வரவேற்றதுடன், அவர்களின் விஜயத்தில் தூதுக்குழுவினருடன் இணைந்திருந்தார்.

இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கிடைக்கும் வாய்ப்புக்களை ஆராய்வதும் இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கிடையில் வர்த்தகத்  தொடர்புகளை ஏற்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

தூதுக்குழுவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து தமது விஜயத்தின் போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததுடன், இலங்கையுடனான நெருக்கமான பொருளாதார ஈடுபாட்டிற்கான தமது தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.  இந்த சந்திப்பின் போது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பிரதமரின் செயலாளர்  அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த விஜயத்தின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் பிரதிநிதிகள் குழு சந்தித்தது. வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, வேலை வாய்ப்புக்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஓமான்  சுல்தானேற்றின் தூதுவர் ஷேக் ஜுமா ஹம்தான் அல் ஷெஹியும் கலந்து கொண்டார்.

ஓமானிய மனிதவள ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஓமானிய பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவரை சந்தித்து ஓமானில் இலங்கை தொழிலாளர் ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி  கலந்துரையாடியதுடன் அரசாங்க ஒழுங்குபடுத்தப்பட்ட ஏற்பாட்டின் கீழ் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர்.

இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் கொழும்பில் உள்ள சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, வருகை தந்திருந்த ஓமானிய பிரதிநிதிகளுக்கும் அவர்களது இலங்கை சகாக்களுக்கும் இடையில் வர்த்தகம் முதல் வர்த்தகம் வரையிலான சந்திப்புகள் இடம்பெற்றமை விஜயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். வணிகம் முதல் வணிகம் வரையிலான கூட்டங்களில் பெருமளவிலான இலங்கை நிறுவனங்கள் பங்கேற்றன. தூதுவர் அமீர் அஜ்வாத், இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் நந்திக புத்திபால, ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ரெதா அல்சாலிஹ் ஆகியோர் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினர். இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் விளக்கக்காட்சிகள்  மன்றத்தின் போது இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களை எடுத்துக்காட்டின. இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் ஓமான் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர்கள் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இரு சபைகளுக்கும் இடையில் கடந்த வருடம் ஜூலை  மாதம் இணையவழியில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இலங்கையின் பிரபல ஆயுர்வேத நிறுவனமான சித்தாலேப (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஓமானின் லாமா பாலி கிளினிக் எல்.எல்.சி. ஆகியவற்றுக்கு இடையே சித்தாலேப ஆயுர்வேத தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை ஓமான் சுல்தானேற்றில் அறிமுகப்படுத்தும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஓமானிய வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்துடன் பயனுள்ள சந்திப்பொன்றை நடாத்தியதுடன், இலங்கையின் அரச துறைக்கும் ஓமானின் தனியார் துறைக்கும் இடையிலான வர்த்தகத்திற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது, இலங்கையின் சுற்றுலாத் துறையில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஓமானிய வர்த்தகப்  பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கூட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு முன்மொழியப்பட்டது. கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் முதலீட்டுச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கையில் முதலீட்டுச் சபையின் செயற்பாடுகள் மற்றும் முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் குறித்து வருகை தந்த ஓமானிய வர்த்தகக் குழுவிற்கு விளக்கமளித்தார்.

ஓமானி வர்த்தகப் பிரதிநிதிகள், மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தின் தலைவரையும் சந்தித்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பி.எம். துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்தனர். பிரதிநிதிகள் குழு இலங்கையின் பத்திரங்கள் மற்றும்  பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவருடனும் கலந்துரையாடியதுடன் இரு தரப்பினரும் இரு நாடுகளிலும் வர்த்தகம் செய்வது தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்கள் தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் மற்றும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்தனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பிரபல வர்த்தக நாம நிறுவனங்களான அக்பர் பிரதர்ஸ்  டீ பெக்கிங் சென்டர், ஸ்மெக் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள இசபெல்லா ஆடை தொழிற்சாலை மற்றும் தெஹிவளை - கல்கிஸ்ஸையில் உள்ள சித்தாலேப ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றின் தொழிற்சாலைகளுக்கும் ஓமானிய பிரதிநிதிகள் கள விஜயம் மேற்கொண்டனர். இலங்கையின் கடலில் இருந்து மீட்கப்பட்ட புதிய விஷேட பொருளாதார வலயமான கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தையும் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

இலங்கைக்கு விஜயம் செய்த ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் உயர்மட்டக் குழுவை கௌரவிக்கும் வகையில், இலங்கையின் வோட்டர்ஸ் எட்ஜில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய உத்தியோகபூர்வ இரவு விருந்தொன்றை  வழங்கினார்.

தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஓமான் வணிக சபையின் சபை உறுப்பினரும், சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவருமான அலி ஹம்தான் அல் அஜ்மி, சபை உறுப்பினர் மற்றும் தெற்கு ஏ ஷர்கியா கவர்னரேட்டின் தலைவரான அன்வர் ஹமத் சைட் அல் சினானி, முன்னணி ஓமானி தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், மாட்சிமை தங்கிய காலித் முகமது சலீம் அல் சயீத் மற்றும் கட்டுமானம், ஆலோசனை, மருத்துவ சேவைகள், உணவு வழங்கல், விளம்பரச் சேவைகள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, பழங்கள் மற்றும் மரக்கறிகள், உணவு வழங்கல், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள், மின்னணுவியல்,  மனிதவள வழங்கல், மாநாட்டு முகாமைத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலான முன்னணி ஓமானிய தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் அடங்குவர்.

ஓமானிய வர்த்தகக் குழுவின் இலங்கைக்கான உயர்மட்ட விஜயமானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கையின் பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைச்சு மற்றும் ஓமானில்  உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2022 மார்ச் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close