ஈரானுடனான விளையாட்டு ரீதியான ஒத்துழைப்பை தெஹ்ரானில் விளையாட்டு நட்பு நிகழ்வு மேம்படுத்தல்

ஈரானுடனான விளையாட்டு ரீதியான ஒத்துழைப்பை தெஹ்ரானில் விளையாட்டு நட்பு நிகழ்வு மேம்படுத்தல்

2021 நவம்பர் 19 முதல் 26 வரை ஈரானில் நடைபெற்ற 35வது உலக இராணுவ மல்யுத்த சம்பியன்ஷிப்பிற்கு இணையாக, இலங்கை - ஈரான் விளையாட்டு நட்பு நிகழ்வு - 2021 ஐ தெஹ்ரானில் உள்ள தனது சான்சரியில் ஈரான் மல்யுத்த சம்மேளனத்துடன் இணைந்து ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 நவம்பர் 23ஆந் திகதி ஏற்பாடு செய்தது. இலங்கை முப்படைகள், ஈரானிய மல்யுத்த சம்மேளனம், விளையாட்டு தொடர்பான தொழில்கள், விளையாட்டு சுற்றுலாத் துறை சங்கங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். குறிப்பாக மல்யுத்தத்தில் இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையிலான விளையாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆரம்ப பாதை வரைபடத்தை உருவாக்குவதே இந் நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

தனது ஆரம்ப உரையில் பங்கேற்பாளர்களை வரவேற்ற ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜா விஸ்வநாத் அபோன்சு, விளையாட்டு நட்புறவில் பங்குபற்றிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கை மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முறையே உலகில் கிரிக்கெட் மற்றும் மல்யுத்தத்தில் நன்கு அறியப்பட்ட நாடுகளாக இருப்பதனால், விளையாட்டுகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால பன்முக இருதரப்பு உறவுகளை சுட்டிக்காட்டிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையில் விளையாட்டுத் துறையில் அறிவு, அனுபவங்கள், நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்வது சரியான நேரத்தில் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இருதரப்பு விளையாட்டு நட்புறவு நிகழ்வின் ஊடாடும் அமர்வின் போது, இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் மல்யுத்தம் போன்ற பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் தற்போதுள்ள விளையாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் இலங்கை இராணுவ மல்யுத்த அணி மற்றும் ஈரான் மல்யுத்த சம்மேளனம் ஆகிய இருதரப்பும் ஆராய்ந்தன. இலங்கை மல்யுத்தத்தில் தற்போதைய தரநிலைகள், தற்போதைய தேவைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள், தேவையான பயிற்சிகள் மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட பல விடயங்கள் இந்த அமர்வில் முன்னிலைப்படுத்தப்பட்டன.இலங்கை மல்யுத்தத்தை உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு உயர்த்துவதற்காக தமது உதவியையும் பூரண ஆதரவையும் வழங்குவதாக ஈரான் மல்யுத்த சம்மேளனம் இந்த விரிவான கலந்துரையாடலின் போது உறுதியளித்தது.

தெஹ்ரானில் நடைபெறும் 35வது இராணுவ மல்யுத்த சம்பியன்ஷிப் - 2021 இற்காக விஜயம் செய்துள்ள இலங்கையின் மல்யுத்தப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளுக்காக, ஈரான் அரசாங்கம் மற்றும் ஒழுங்குப் படைகளைப் பாராட்டிய தூதுவர் விஸ்வநாத் அபோன்சு, ஈரான் மல்யுத்த சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் இப்ராஹிம் மெஹ்ரபான் (ஈரானிய முன்னாள் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் மற்றும் 1996 இல் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 1996/97 இல் ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பதக்கம் வென்றவர்) இலங்கை மல்யுத்தத்திற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு உறுதியளித்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்தார். இந்த ஊடாடும் அமர்வின் நிறைவில், இலங்கை மல்யுத்த சம்மேளனத்திற்கும் ஈரான் மல்யுத்த சம்மேளனத்திற்கும் இடையில் 2022 இல் அந்தந்த இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சுக்களுடன் இணைந்து ஒரு வெபினாரொன்றை தூதரகம் ஏற்பாடு செய்து, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த அமர்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுக் குழுவை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் என தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ மல்யுத்த தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய எயார் கொமடோர் உதுல விஜேசிங்க, தனது அனைத்து அணி வீரர்களின் பங்கேற்புடன் தூதரகத்தில் விளையாட்டு நட்புறவு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். ஊடாடும் அமர்வின் நிறைவில் தனது பிரதிநிதிகள் மிகவும் திருப்தி அடைந்ததாகவும், ஈரானுக்கான அவர்களது விஜயத்தின் போது மகத்தான அனுபவங்களைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலோன் தேயிலை ஊக்குவிப்பு நிகழ்வுடன் பங்கேற்பாளர்களுக்கு உயர் ரக தேநீர் வழங்கப்பட்டது. அனைத்து இலங்கை மல்யுத்தக் குழு உறுப்பினர்களுக்கும் ஈரானில் உள்ள மரூஜ் நிறுவனத்தால் வழங்கப்படும் மல்யுத்தப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதி வழங்கப்பட்டதுடன் ஏனைய விருந்தினர்களுக்கு சிலோன் தேயிலையின் பரிசுப் பொதி மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு நட்பு நிகழ்வின் போது 'இந்து சமுத்திரத்தின் முத்து' குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2021 நவம்பர் 26

 

Please follow and like us:

Close