ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெஹ்ரானில் விளையாட்டு ஒத்துழைப்பு நிகழ்வை ஏற்பாடு

ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெஹ்ரானில் விளையாட்டு ஒத்துழைப்பு நிகழ்வை ஏற்பாடு

2022 பெப்ரவரி 13-26 வரை கொழும்பில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட டென்னிஸ் சம்பியன்ஷிப் - 2022 க்கான தெரிவுப் போட்டிகளுக்காக ஈரான் தேசிய கனிஷ்ட டென்னிஸ் அணியின் இலங்கை விஜயம் தொடர்பாக, தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஈரானின் டென்னிஸ் கூட்டமைப்புடன் இணைந்து 2022 பிப்ரவரி 10ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள அதன் சான்சரி வளாகத்தில் இலங்கை - ஈரான் விளையாட்டு ஒத்துழைப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. ஈரானில் உள்ள குறிப்பிடத்தக்க டென்னிஸ் வீரர்கள், டென்னிஸ் சம்மேளனத்தின் முக்கிய அதிகாரிகள், டென்னிஸ் துறை பங்குதாரர்கள் மற்றும் கனிஷ்ட டென்னிஸ் வீரர்கள் உட்பட 35 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள விளையாட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது மற்றும் ஈரானின் தேசிய கனிஷ்ட டென்னிஸ் அணிக்கு இலங்கை பற்றிய பின்னணி மற்றும் ஏனைய தொடர்புடைய தகவல்களை வழங்குவது இந்த நிகழ்வின் நோக்கங்களாகும்.

தனது ஆரம்ப உரையில் கலந்துகொண்டவர்களை வரவேற்ற ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜ விஸ்வநாத் அபோன்சு, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியப் பகுதியாக விளையாட்டு இனங்காணப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். கத்தாரில் நடந்த பீபா உலகக் கிண்ணம் - 2022 இல் கிடைத்த இடம் உட்பட சமீபத்திய ஈரானின் விளையாட்டு சாதனைகளை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளும் விளையாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ஏனைய நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளுக்கும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதை எடுத்துரைத்தார். மேலும், விளையாட்டுத் துறையில் குறிப்பாக கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, மல்யுத்தம் மற்றும் தற்காப்புக் கலைகளில் இரு நாடுகளுக்கும் இடையே அறிவு, அனுபவங்கள், நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ள முடியும் என அவர் வலியுறுத்தினார்.

விளையாட்டு ஒத்துழைப்பு நிகழ்வின் ஊடாடும் அமர்வின் போது, இலங்கைத் தூதரகம் மற்றும் ஈரான் டென்னிஸ் சம்மேளனம் ஆகிய இரண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான டென்னிஸ் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் ஆராயப்பட்டன. தற்போதைய தரநிலைகள், தேவைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள், பகிர்வு பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. தூதுவர் முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் டென்னிஸ் சம்மேளனம், இலங்கை மற்றும் ஈரான் டென்னிஸ் சம்மேளனங்களுக்கு இடையில் டென்னிஸ் துறையின் அபிவிருத்தியை அடைவதற்காக கூட்டு ஒத்துழைப்புக்கான முன்மொழிவை அனுப்புவதாக உறுதியளித்தது.

ஈரான் டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி தாவூத் அஸிஸி, தனது சுருக்கமான கருத்துக்களில், இலங்கை தூதரகத்தில் தேசிய அளவிலான கனிஷ்ட டென்னிஸ் வீரர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் பங்கேற்புடன் விளையாட்டு ஒத்துழைப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்தார். இலங்கை - ஈரான் டென்னிஸ் துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு தனது பூரண ஆதரவை வழங்கிய ஈரான் டென்னிஸ் சம்மேளனத் தலைவர், ஈரானிய கனிஷ்ட டென்னிஸ் அணி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான விசாக்களை வழங்குவதற்கு வழங்கிய உதவிகளுக்காக தூதரகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

பங்கேற்பாளர்களுக்கு தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்ரக தேநீர் வழங்கப்பட்டது. அனைத்து விருந்தினர்களுக்கும் இலங்கைத் தேநீர் மற்றும் டோக்கன்கள் அடங்கிய பரிசுப் பொதி வழங்கப்பட்டது. நிகழ்வின் போது 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்ற ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2022 பிப்ரவரி 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close