நாளை, 2024, மே 22 அன்று நடைபெறவுள்ள மறைந்த ஈரான் இஸ்லாமிய குடியரசின், ஜனாதிபதி டாக்டர் செய்யத் இப்ராஹிம் ரைசி மற்றும் மறைந்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் அமீர் அப்துல்லஹியான் ஆகியோரின் அரச இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான உயர்மட்டக் குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி தலைமை தாங்குவார்.
அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் இரங்கல் செய்தியை ஈரானின் அதியுயர் தலைவரிடம் கையளிக்கவுள்ளார். நெருங்கிய மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், மறைந்த ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எப்.எம். அஸ்மி மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பல்தரப்பு விவகாரங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிரிவிற்கான மேலதிக செயலாளர் யூ.எல்.எம். ஜௌஹர் ஆகியோர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனான இவ்விஜயத்தில் இணைந்துகொள்ள உள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 மே 21