இலத்திரனியல் மற்றும் மின்சார தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக பங்களாதேஷுடன் இலங்கை கைகோர்ப்பு

இலத்திரனியல் மற்றும் மின்சார தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக பங்களாதேஷுடன் இலங்கை கைகோர்ப்பு

 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் பங்களாதேஷ் வர்த்தக மற்றும் கைத்தொழில்  சம்மேளனத்துடன் இணைந்து, பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 செப்டெம்பர் 12ஆந் திகதி இலங்கை இலத்திரனியல் மற்றும் மின்சார ஏற்றுமதியாளர்களுக்கான மெய்நிகர் வர்த்தக அமர்வை ஏற்பாடு செய்தது.

பங்களாதேஷைச் சேர்ந்த மூன்று முன்னணி இலத்திரனியல் மற்றும் மின்சார நிறுவனங்கள் வர்த்தக அமர்வில் இணைந்ததுடன், பங்களாதேஷ் சந்தையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை  வழங்கும் 10 இலங்கை நிறுவனங்களுடன் பயனுள்ள சந்திப்புக்களை நடாத்தியது.

பங்களாதேஷ் இலத்திரனியல் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையில் தனியான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இச்சந்திப்பில், இலங்கையின் இலத்திரனியல் மற்றும் மின்சார தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்பட சங்கத்தின் விருப்பத்தை செயலாளர் நாயகம் கௌரங்க டே தெரிவித்தார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும்  ஆர்வமுள்ள பகுதிகளைக் குறிப்பிட்டு தமது முன்மொழிவுகளை சங்கத்திற்கு சமர்ப்பிக்குமாறு செயலாளர் நாயகம் இலங்கை நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையிலான மின்சாரத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் பன்முகப்படுத்துவதற்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை ஏற்றுமதி  அபிவிருத்தி சபையும் இணைந்து செயற்படுகின்றன.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

டாக்கா

2022 செப்டம்பர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close