2020 டிசம்பர் 16ஆந் திகதி நடைபெற்ற உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு - 2020 இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, எஸ்தோனிய வெளிநாட்டு அமைச்சர் உர்மாஸ் ரெய்ன்சாலு அவர்களால் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த உச்சிமாநாட்டை எஸ்தோனியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன இணைந்து நடாத்தின.
21ஆம் நூற்றாண்டு அறிவு மற்றும் புதுமைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை அங்கீகரித்து, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் அறிவால் இயங்கும் இலங்கைக்கான புதிய தொடக்கத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக இலத்திரணியல் ஆட்சி மற்றும் சைபர் பாதுகாப்பின் கீழான உச்சிமாநாட்டில் உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். பல அடுக்கு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், இதுபோன்ற சேவைகள் பயனுள்ளதும், வெளிப்படையானதும், மற்றும் ஊழல் அற்றவையுமாகும் என்பதை உறுதிசெய்கின்ற இலங்கையின் டிஜிட்டல் அரசாங்கக் கட்டமைப்பைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வெளிநாட்டு அமைச்சர் வழங்கினார். பிரஜைகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் ஆட்சியின் மையமான வாழ்க்கை வரலாற்று மற்றும் சுயவிபரத் தரவு தொடர்பான தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு, நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, மோட்டார் போக்குவரத்து, வருமான வரி மற்றும் உள்ளூராட்சித் துறைகளில் இலத்திரணியல் ஆட்சி உட்பட்ட சேவைகள் காணப்படும். இலத்திரணியல் ஆட்சி, இலத்திரணியல் வணிகம் மற்றும் இலத்திரணியல் மருத்துவம் மற்றும் அத்தகைய டிஜிட்டல்மயமாக்கல்கள் கோவிட்-19 க்குப் பிந்தைய உலகில் உள்ள 'புதிய இயல்பான' நிலைமையை வரையறுக்கும் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.
புடாபெஸ்ட் சைபர் குற்ற மாநாட்டிற்கான அரச தரப்பாக மாறிய முதலாவது நாடு இலங்கை என்பதை சிறப்பித்துக் கூறிய அமைச்சர் குணவர்தன, சைபர் தாக்குதல்கள், ஃபிஷிங் மோசடிகள் மற்றும் இதுபோன்ற தீங்கிழைக்கும் செயல்களுக்கு வழிவகுப்பதால், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவருடன் கலந்தாலோசித்து, கட்டாய சைபர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை சைபர் பாதுகாப்புக்கான இலங்கை மையம் வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தார். பொது மற்றும் தனியார் துறைகளில் திறனை வளர்ப்பதற்கும் திறமையான இணையப் பாதுகாப்புப் பணியாளர்களை உருவாக்குவதற்கும் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, சைபர் பாதுகாப்புக்கான இலங்கை மையம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் ஆகியன சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் சைபர் பாதுகாப்புச் சூழல் அமைப்பை தொடர்ந்தும் கண்காணித்து பலப்படுத்தின.
கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட சிக்கலான உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்காக, அரசாங்கங்களையும் வணிகங்களையும் உலகளாவிய வணிக உச்சி மாநாடு - 2020 ஒன்றிணைத்தது. இணை-ஒழுங்கமைப்பாளர்களான எஸ்தோனியாவின் வெளிநாட்டு அமைச்சர் உர்மஸ் ரெய்ன்சாலு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சர் ஷெய்க் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானொம் கேப்ரெயெசஸ், உலகளாவிய மாற்றத்திற்கான டொனி பிளேர் நிறுவகத்தின் நிறைவேற்றுத் தலைவர் ஓய்வு பெற்ற கௌரவ டொனி பிளேர் மற்றும் இங்கிலாந்தின முன்னாள் பிரதமர் உள்ளிட்டோர் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். இந்த மெய்நிகர் மாநாட்டை உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர் பார்வையிட்டதுடன், ஜப்பான், ஸ்பெயின், கஸகஸ்தான், பெல்ஜியம், ஹங்கேரி, சிங்கப்பூர், போலந்து மற்றும் நாற்பது மொத்த நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டப் பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.
Video Link : https://m.youtube.com/watch?v=wMEMsx9Dfik
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
20 டிசம்பர் 2020