இலங்கை வர்த்தக அமைச்சர் ஓமானுக்கான இருதரப்பு விஜயத்தை நிறைவு

இலங்கை வர்த்தக அமைச்சர் ஓமானுக்கான இருதரப்பு விஜயத்தை நிறைவு

இலங்கை வர்த்தக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இலங்கைத் தூதுக்குழு ஓமான் சுல்தானகத்திற்கு 2022 மார்ச் 27 - 28 வரை மேற்கொண்டஇருதரப்பு வர்த்தக விஜயத்தை ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது.

ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தலைமையிலான 17 உறுப்பினர்களைக் கொண்ட ஓமான் வர்த்தகக் குழு 2022 மார்ச் 05 முதல் 09 வரை இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் விளைவாக இலங்கை வர்த்தக அமைச்சர் குழுவின் விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை அமைச்சர் மட்ட வர்த்தகக் குழுவானது ஓமான் சுல்தானகத்துக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், இலங்கை வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகேந்திர பெரேரா இலங்கை வர்த்தகத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். சோமசேன மஹதுல்வேவா, சினெக் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகர், அட்மிரல் (ஓய்வு பெற்ற) திசர சமரசிங்க மற்றும் எஸ்.எல்.டி.சி.யின் இன் தலைவர் ரஞ்சித் ரூபசிங்க ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.

அமைச்சர் பந்துல குணவர்தன, தூதுக்குழுவினருடன், ஓமான் எரிசக்தி மற்றும் கனியவள அமைச்சர் கலாநிதி மொஹமட் அல் ரூம்ஹியை சந்தித்து, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிற்கான கடிதம் ஒன்றை கையளித்தார். இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிவாயு சேமிப்பு வசதிகளை அரச மட்டத்தில் நிறுவுவதில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

இலங்கை அமைச்சர்களின் வர்த்தக பிரதிநிதிகள் குழு ஓமானின் பாரம்பரிய மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சேலம் பின் மொஹமட் அல் மஹ்ருகியை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய்ந்தனர். இரு நாடுகளிலும் சுற்றுலா நடத்துபவர்களுக்கு இடையே இணைப்புக்களை எளிதாக்குவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்த சந்திப்பின் போது, தூதர் அமீர் அஜ்வாத், இரு நாடுகளின் சுற்றுலா அமைச்சகங்களுக்கு இடையே கையெழுத்திடுவதற்காக தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஊக்கியாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் குணவர்தன தலைமையிலான இலங்கை அமைச்சர்களின் வர்த்தகக் குழு, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைக்கான துணைச் செயலாளர் கலாநிதி சலேஹ் ம்சான் தலைமையில் ஓமான் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் பிரதிநிதிகளுடன் விரிவான இருதரப்பு கலந்துரையாடலை நடாத்தியது. வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு இரு நாடுகளிலும் உள்ள வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடங்குவதற்கான சாத்தியமான துறைகளையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 2022 செப்டெம்பர் மாதம் இலங்கையில் இருந்து பல்துறை வர்த்தக பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்புடன் ஓமானில் வர்த்தக மன்றங்கள் மற்றும் வர்த்தக சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்த விஜயத்தின் போது அடையாளம் காணப்பட்ட பகுதிகளை பின் தொடரும் நோக்குடன் அரசு மற்றும் தனியார் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்றை அமைக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இலங்கை அமைச்சர் வர்த்தக பிரதிநிதிகள் குழுவானது ஓமான் உயர்கல்வி அமைச்சின் துணைச் செயலாளர் கலாநிதி பகித் அஹமட் அல்-மஹ்ரி தலைமையிலான குழுவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றையும் நடாத்தியது. ஓமானி மாணவர்களுக்கு இலங்கையில் உயர்கல்வித்துறையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றிய தகவல்களை இலங்கை பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டனர். கூட்டு முயற்சியின் அடிப்படையில் இலங்கை உயர் கல்வி வசதிகளை ஓமானில் நிறுவுவதற்கான வாய்ப்புகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்.

இலங்கை அமைச்சர் வர்த்தக பிரதிநிதிகள் குழுவானது ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் 2022 மார்ச் 05 முதல் 09 வரை தொடர் சந்திப்பை நடாத்தியதுடன், ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இலங்கைக்கு மேற்கொண்ட சமீபத்திய விஜயத்தின் பெறுபேறுகளை ஆராய்ந்தது. இலங்கையிலிருந்து ஓமானுக்கு வரவிருக்கும் வணிகப் பிரதிநிதிகளின் வருகைக்கான வேலைத்திட்டம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். இரு நாடுகளிலும் உள்ள தனியார் நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பை நிறுவும் நோக்கில் வருகை தந்த இலங்கை வர்த்தகக் குழுவிற்கு ஓமானில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுடனான சந்திப்புக்களை ஓமன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஓமானில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட் மற்றும் ஸ்பார் பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்ற அமைச்சர் குணவர்தன மற்றும் தூதுக்குழுவினர், நிர்வாகத்துடன் சந்திப்புக்களை நடாத்தியதுடன், ஓமானி சில்லறை சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலங்கைத் தயாரிப்புக்களை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2022 ஏப்ரல் 06

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close