இலங்கை மற்றும் பூட்டானிற்கு இடையிலான இரண்டாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2025 மே 27 அன்று திம்புவில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சில் நடைபெறும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் பூட்டான் வெளியுறவுச் செயலாளர் பெமா சோடன் ஆகியோர் இவ்வாலோசனைகளுக்கு இணை தலைமை வகிக்கவுள்ளனர்.
நடைபெறவுள்ள ஆலோசனைகளில், 2015 நவம்பரில் கொழும்பில் நடைபெற்ற இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் முதல் சுற்றுக்குப் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது. கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், இணைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள், வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இவ்விவாதங்களில் கவனம் செலுத்தப்படும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 மே 23


