இலங்கை மற்றும் நேபாள கட்டுமான நிறுவனங்களுக்கு இடையே மெய்நிகர் வர்த்தக சந்திப்பு

இலங்கை மற்றும் நேபாள கட்டுமான நிறுவனங்களுக்கு இடையே மெய்நிகர் வர்த்தக சந்திப்பு

நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியனஇணைந்து ஏற்பாடு செய்த ஊடாடும் வணிக சந்திப்பு அமர்வுக்காக இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இருபது கட்டுமான நிறுவனங்கள் 2021 டிசம்பர் 21ஆந் திகதி ஸூம் தொழினுட்பம் மூலம் இணைக்கப்பட்டன.

கட்டிட நிர்மானம், வீதி அபிவிருத்தி, பாலங்கள் மற்றும் நீர்ப்பாசனம் முதல் நீர் மின்சாரம் மற்றும் சூரிய சக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் வரையிலான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றன. அதன்படி, மாஸ்டர் ஹெல்லிஸ் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ், டெரிங்டன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட், சன்மால் இன்டர்நெஷனல் பிரைவேட் லிமிடெட், வெனோரா லங்கா பவர் பெனல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏ.பி.எஸ். லங்கா பிரைவேட் லிமிடெட், சன்கென் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட், சியரா கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட், லேண்ட்மார்க் ப்ரொப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ட்ரீட் அன்ட் லாஃப்ஸ் பவர் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் இருந்து பங்குபற்றின. அமர் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட், கோர்க்கா கன்ஸ்ட்ரக்ஷன், ஜம்புடிப் கன்ஸ்ட்ரக்ஷன், துண்டி கன்ஸ்ட்ரக்ஷன், ரபீனா கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட், பைபாப் பவர் நேபால் பிரைவேட் லிமிடெட், பி.பி.டி. கன்ஸ்ட்ரக்ஷன் அன்ட் சப்ளையர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹிமாலயன் இன்ஜினியரிங் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நியூ டெக்னிகல் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் ஆகியன நேபாளத்திலிருந்து இணைந்திருந்தன.

ஆரம்ப உரையை நிகழ்த்திய ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்றுமதிச் சேவைகள் பணிப்பாளர் இந்துமினி கொடிகார, சிறிய நீர் மின்சாரம், நீரியல் பொறியியல் சேவைகள், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் மண் மற்றும் புவிசார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இலங்கை ஏற்கனவே உலக சந்தையில் பிரவேசித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த மாறுபட்ட நிபுணத்துவம் இரு தொழில்களுக்கும் கூட்டு ஒத்துழைப்புக்களில் பங்குதாரராக பல வாய்ப்புக்களை வழங்குகின்றது.

தனித்தனி சந்திப்பு அறைகளில் ஏழு சக நிறுவனங்களுடன் ஈடுபட அனுமதிக்கும் வகையில் இந்த வணிக சந்திப்பு அமர்வு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடாத்தப்பட்டது. புதிய கூட்டாண்மைகளை சந்திப்பதற்கும் உருவாக்குவதற்கும், வணிக வாய்ப்புக்களை ஆராய்வதற்கும் கிடைத்த வாய்ப்புக்காக பங்கேற்பு நிறுவனங்கள் ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தன. சில இலங்கை நிறுவனங்கள் நேபாளத்தில் உள்ள வணிகப் பங்காளிகள் மற்றும் அரசாங்கப் பங்குதாரர்களைச் சந்திப்பதற்காக எதிர்காலத்தில் அதிகமான ஈடுபாடுகளை மேற்கொள்வதற்காக பௌதீக ரீதியான விஜயங்களை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தின.

நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணாதிலக தனது நிறைவுரையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் நிர்மாணப்பணிகள் அபிவிருத்திக்கான முக்கிய துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார். கட்டுமானத் திட்டங்களில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை செயற்படுத்துவது மட்டுமல்லாமல், கட்டுமானப் பொருட்களின் வர்த்தகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியன இந்த வணிக சந்திப்பு அமர்வின் நோக்கமாகும் என அவர் எடுத்துரைத்தார். எதிர்காலத்திலும் தமது ஈடுபாட்டைத் தொடருமாறு பங்கேற்பாளர்களை ஊக்குவித்த அவர், ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து தூதரகத்தின் முழுமையான ஆதரவையும் வசதியையும் வழங்குவதாக உறுதிப்படுத்தினார்.

இலங்கைத் தூதரகம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியன இலங்கை மற்றும் நேபாள தொழில்துறை சங்கங்களுடன்இணைந்து ஒருங்கிணைத்த 'இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான கட்டுமானத் துறையில் ஒத்துழைப்பு' என்ற தலைப்பில் 2021 மே 04ஆந் திகதி நடாத்தப்பட்ட வெற்றிகரமான வலையரங்கின் தொடர்ச்சியே இந்த வணிக சந்திப்பு அமர்வு ஆகும்.

இலங்கைத் தூதரகம்,

காத்மாண்டு

2021 டிசம்பர் 29

Please follow and like us:

Close