இலங்கை மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர்கள் பௌத்தப் பாரம்பரியத்தை  கட்டியெழுப்புவதற்கு உறுதி

 இலங்கை மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர்கள் பௌத்தப் பாரம்பரியத்தை  கட்டியெழுப்புவதற்கு உறுதி

துணைப் பிரதமரும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சருமான திரு. டொன் பிரமுத்வினாயுடனான  கலந்துரையாடலின் போது, இரண்டு நாடுகளும் தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றுவதால் வலுவான மற்றும் வரலாற்று இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

இலங்கையில் போதியளான சிரேஷ்ட பௌத்த பிக்குகள் இல்லாத சமயத்தில், பௌத்த பிக்குகளைப் பராமரிக்கும்  முகமாக தாய்லாந்து அளித்த உதவியை அமைச்சர் பாராட்டினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் அரசாங்கங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக மக்களுக்கிடையேயான உறவுகளையும் கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பிம்ஸ்டெக், ஐயோரா மற்றும் ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் போன்ற பல சர்வதேச மற்றும் பிராந்தியக் குழுக்களில் இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளன. விவசாயம், உள்நாட்டு மீன்வளம் மற்றும் இரத்தினம் மற்றும் ஆபரணங்ளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். எமது தயாரிப்புக்களுக்கு பெறுமதி சேர்ப்பதில் இலங்கை ஆர்வமாக உள்ள அதே வேளை, தாய்லாந்திலிருந்து நிபுணத்துவத்தைப் பெற்று;கொள்ள முடியும் என்பதில் இலங்கை விழிப்பாக இருக்கின்றது.

அனுமதியின்றி தனிப்பட்ட நாடுகளின் மீது வெளிநாட்டுத் தீர்வுகளைத் திணிப்பது ஐ.நா. வின் கொள்கைகளுக்கு  முரணானது என்ற கொள்கை நிலைப்பாட்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரவளித்தமைக்காக தாய்லாந்து அரசாங்கத்திற்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையில் அரச 'கட்டின' வில் பங்கேற்ற நினைவுகளைக் குறிப்பிட்ட தாய்லாந்து வெளிநாட்டு அமைச்சர்,  கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் இலங்கை பௌத்த புனிதப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தமையை நினைவூட்டியதுடன், கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன் அது மீண்டும் புத்துயிர் பெறும் என நம்பிக்கை வெளியிட்டார். பிம்ஸ்டெக்கின் தலைமையை இலங்கையிலிருந்து பொறுப்பேற்கவும், முயற்சிகளை முன்னெடுக்கவும் தயாராக இருப்பதாக தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும், அது சார்ந்த பொறுப்பு பெருநிறுவனத் துறை, சமூகம் மற்றும் இளைஞர்கள் என அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.  நாம் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் மற்றும் ஒத்துழைப்புடன் இணைந்து அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 செப்டம்பர் 24

Please follow and like us:

Close