இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனையில் உள்ள பிழையான மற்றும்  காலாவதியான தகவல்களை இலங்கை அரசாங்கம் திருத்தம்

 இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனையில் உள்ள பிழையான மற்றும்  காலாவதியான தகவல்களை இலங்கை அரசாங்கம் திருத்தம்

தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்த தவறான குறிப்புக்கள்,  பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டினரைத் துன்புறுத்துதல் தொடர்பான தவறான தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, நாட்டில் நிலவும் உண்மைகளை கனேடிய அதிகாரிகளுக்கு பின்வருமாறு தெரிவிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது:

கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களை இலங்கை வெற்றிகரமாக  முறியடித்துள்ளதுடன், கோவிட்-19 தொடர்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அனைத்து பொதுச் சேவை, நிறுவன, வணிக மற்றும் கல்விச் செயற்பாடுகள் இடையூறுகளின்றி சாதாரணமாக செயற்படும் வகையில் தற்போது இயல்பு நிலையில் உள்ளது. எமது நாடு தழுவிய தடுப்பூசித் திட்டம் உலக சுகாதார நிறுவனத்தால் பாராட்டப்பட்ட அதே வேளை, தகுதியான மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90% ஆனோர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். 20 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் நிலைமையின் போதிலும், சி.என்.என். இன் '2022 இல் பயணம் செய்ய வேண்டிய இடம்', குளோபல் வெல்னஸ் இன்ஸ்டிட்யூட், கொண்டே நாஸ்ட் டிரவலர் 2021 வாசகர் விருப்பு விருதுகள் மற்றும் லோன்லி பிளேனட் மற்றும் நெஷனல் ஜியோகிராபிக் டிரவல் ஆகியவற்றால் இதற்கு  முன்பு பெற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய அங்கீகாரங்கள் உட்பட சுற்றுலாத் துறையில் பல சர்வதேசப் பாராட்டுகளை இலங்கை பெற்றுள்ளது. உலகளவில் பயணத்தை படிப்படியாக இயல்பாக்குவதன் மூலம் கனடா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்வதனை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,  விவேகமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்த ஆண்டு தனது பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் இலங்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளாகும் அதே வேளை, அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முக்கிய பகுதியாகக் கருதப்படுகின்றது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பொதுமக்களுக்கு எல்லா நேரத்திலும் தொடர்ந்தும் கிடைப்பதையும், போதுமான அளவு உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதையும் உறுதி செய்வதற்கு அதிகமான முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தமட்டில், இலங்கை அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக குறைந்தபட்ச இராணுவப் பிரசன்னத்தைப் பேணி வருகின்றது. பொலிஸ் அல்லது பாதுகாப்புப் படையினரால் தன்னிச்சையாகக் கைது செய்து, தடுத்து வைக்கப்படும் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறுவதில்லை. 2009 இல் பயங்கரவாத மோதல் முடிவுக்கு வந்ததிலிருந்து, பல வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவுடன், வடக்கு மற்றும் கிழக்கில் விரிவான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 2014 நிலவரப்படி, கண்ணிவெடி அகற்றும் பணி 94% நிறைவடைந்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 98.7% ஆக உயர்வடைந்துள்ளது. 'பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது' என்றும், 'மேலதிக தாக்குதல்கள் இடம்பெறுவதை நிராகரிக்க முடியாது' என்றும் அறிவுரை கூறப்பட்டுள்ளது. 2019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பையும், தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மேம்பட்ட விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, இக்காலப்பகுதியில் இலங்கையில் பயங்கரவாதம் தொடர்பான ஒரு சம்பவம் கூட நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடான இலங்கை, பல்வேறு சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக சமாதானமாக இணைந்து வாழ்ந்து வரும் வளமான, பரந்த நோக்குள்ள பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. நாட்டில் உள்நாட்டுக் கலவரங்கள் எதுவும் இடம்பெறுவதில்லை. வலுவான அமைப்புக்கள் மற்றும் துடிப்பான சிவில் சமூகத்துடன் கூடிய நீண்ட ஜனநாயகப் பாரம்பரியத்தை இலங்கை கொண்டுள்ளது. தாராளவாத ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மரபுகள் நிலவும் ஏனைய எந்தவொரு நாட்டையும் போலவே இலங்கையிலும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதன் மூலம் ஒன்றுகூடல் சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் தடையின்றி நடைபெறுவதற்கு பொலிஸார் அனுமதி அளித்ததுடன், தொடர்ந்தும் அனுமதி அளித்தும் வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் சுற்றுலாப் பயணிகளின் வசதி,  நடமாட்டம், பாதுகாப்பு அல்லது செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது.

நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேசங்களிலும் சுற்றுலா சார்ந்த பொலிஸார் உட்பட பொலிஸாரின் பிரசன்னத்தைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் பெண் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ், பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் அனைத்து பிரபலமான சுற்றுலாத் தலங்களிலும் பொலிஸாரின் இருப்பு அதிகரிக்கப்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் இலகுவாக அணுகிக் கொள்ளும் வகையில்,  சுற்றுலா சார்ந்த பொலிஸ் பிராந்தியப் பிரிவுகள், உள்ளூர் பொலிஸ் மற்றும் மருத்துவமனைகள் போன்ற ஏனைய அவசரகாலப் பிரிவுகளின் அவசரத் தொடர்பு இலக்கங்கள் இணையவழியில் காணப்படுகின்றன.

உயர்தரமான கல்வி, ஆங்கில அறிவு மற்றும் கல்வியறிவு கொண்ட நட்புறவான மக்களைக் கொண்ட ஒரு தீவு நாடான இலங்கையில், சுற்றுலாப் பயணிகள் அல்லது வெளிநாட்டவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் அல்லது வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அரிதானதாகக் காணப்படுகின்றன.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2022 ஜனவரி 19

Please follow and like us:

Close