இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புகள் பெல்ஜியத்தில் ஊக்குவிப்பு

இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புகள் பெல்ஜியத்தில் ஊக்குவிப்பு

பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஏப்ரல் 21ஆந் திகதி பெல்ஜியத்திற்கு இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக 'தேங்காய் அதிசயம் - உண்மையிலேயே இலங்கை' என்ற தலைப்பில் ஒரு பட்டறையை நடாத்தியது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சிலோன் வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆகியவை இலங்கையில் உள்ள தேங்காய் உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்களின் பங்கேற்பை மெய்நிகர் தளத்தில் ஒருங்கிணைத்தன.

சைவம், சைவ உணவு மற்றும் ஆசிய சமையலில் நுகர்வோர் ஆர்வம் அதிகரித்து வருவதால், தேங்காய் உற்பத்திகளின் பயன்பாடு சமீபத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஐரோப்பாவில் காய்ந்த தேங்காயின் இறக்குமதிகள் அதிகரித்து வருவதுடன், ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்யும் முன்னணி நாடுகளில் பெல்ஜியமும் உள்ளது.

இலங்கையின் இயற்கை தேங்காய் உற்பத்திகளின் தரம், தேங்காய் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஜீ.எஸ்.பி. பிளஸ் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் உற்பத்திகளுக்கு பூஜ்ஜிய வரிச்சலுகைகள் ஆகியவற்றை பெல்ஜிய இறக்குமதியாளர்கள் பாராட்டினர்.

பெல்ஜிய ஏற்றுமதியாளர்கள் இலங்கை ஏற்றுமதியாளர்களுடன் மெய்நிகர் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர். பெல்ஜிய இறக்குமதியாளர்கள் இலங்கையில் உள்ள ஏற்றுமதியாளர்களுடனான தொடர்பைத் தொடர்வதில் தீவிர ஆர்வம் காட்டியதால், ஆர்வமுள்ள தரப்பினருக்கு இடையே பி2பி சந்திப்புகளை விரைவில் ஏற்பாடு செய்வதாக தூதரகம் உறுதியளித்தது.

மிட்டாய், பேக்கரி மற்றும் சொக்லேட் தொழில், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தக்கூடிய புதிய மற்றும் புதுமையான தேங்காய் தயாரிப்புக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த செயலமர்வின் போது இலங்கை தேங்காய் உற்பத்திகளை மூலப்பொருளாக பயன்படுத்தும் சமையல் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது. ஏனைய முன்னணி ஐரோப்பிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது சிறிய மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும், பெல்ஜியம் 5.8 ஆயிரம் டன் உலர் தேங்காயை யூரோ 11.7 மில்லியன் மதிப்பிற்கு இறக்குமதி செய்கின்றது. பெல்ஜியம் தனது உலர் தேங்காயில் 4% இலங்கையில் இருந்து இறக்குமதி செய்கின்றது.

பெல்ஜியத்தில் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதுமையான மற்றும் அதிநவீன புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தயாரிப்புக் கூடையை பல்வகைப்படுத்துவதன் மூலம் தேங்காய் உற்பத்தி சந்தையில் இலங்கையின் பங்கை அதிகரிப்பதே இந்த செயலமர்வின் நோக்கமாகும். பெல்ஜியம் பல பெரிய அளவிலான சொக்லேட் பொருட்கள், பேஸ்ட்ரிகள், குக்கீகள் மற்றும் ஏனைய இனிப்புப் பண்டங்களின் தாயகமாக உள்ளதுடன், அங்கு உலர் தேங்காய் மற்றும் ஏனைய தேங்காய் உற்பத்திகள் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கைத் தூதரகம்

பிரஸ்ஸல்ஸ்

26 ஏப்ரல் 2022

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close