இலங்கை – சுவீடன் அரசியல் கலந்தாலோசனையின் முதலாம் சுற்று 2023 நவம்பர் 09ஆந் திகதி வெற்றிகரமாக நிறைவு

இலங்கை – சுவீடன் அரசியல் கலந்தாலோசனையின் முதலாம் சுற்று 2023 நவம்பர் 09ஆந் திகதி வெற்றிகரமாக நிறைவு

சிரேஷ்ட மட்டத்திலான உத்தியோகபூர்வ முதலாம் சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை இலங்கையும் சுவீடனும் 2023 நவம்பர் 09ஆந் திகதி கூட்டின. 2024 இல் கொண்டாடப்படவுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த ஆலோசனைகள்  இடம்பெற்றன.

தற்போதுள்ள பன்முகக் கூட்டாண்மையை ஒருங்கிணைப்பதிலும், அதிகரித்த ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளைக் கண்டறிவதிலும் இந்த ஆலோசனைகளின் போது கவனம் செலுத்தப்பட்டன. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும்  இருதரப்பு பொருளாதார கூட்டாண்மை ஆகியவற்றில் இருதரப்புக் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் ஆகியன இந்தக் கலந்துரையாடலின் முக்கிய மையமாக விளங்கின. பலதரப்பு மன்றங்களிலான ஒத்துழைப்பு குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறையில் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு மற்றும் திறனை  வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் இலங்கைத் தரப்பு மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது. இராஜதந்திர உறவுகளின் (2024) 75வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சுவீடனில் இருந்து மேற்கொள்ளப்படக்கூடிய உயர்மட்ட விஜயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இருதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் (மேற்கு) யசோஜா குணசேகர மற்றும் சுவீடனின்  வெளிவிவகார அமைச்சின் ஆசியா, பசுபிக் பிராந்தியம் மற்றும் லத்தீன் அமெரிக்கத் திணைக்களத்தின் தலைவர் ஒஸ்கார் ஸ்க்லிட்டர் ஆகியோர் இந்த ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்கினர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

​2023 நவம்பர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close