இலங்கை சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக பிரஸ்ஸல்ஸில் 'ஹலோ எகெய்ன்' செயற்பணி தொடங்கி வைப்பு

இலங்கை சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக பிரஸ்ஸல்ஸில் ‘ஹலோ எகெய்ன்’ செயற்பணி தொடங்கி வைப்பு

சர்வதேச சுற்றுலாவுக்காக இலங்கையை மீண்டும் திறத்தல் தொடர்பான செயலமர்வை பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 நவம்பர் 18ஆந் திகதி உத்தியோகபூர்வ இல்லத்தில் நடாத்தியது. நம்பமுடியாத அம்சங்கள் மற்றும் நிலப்பரப்புக்களை பயணிகள் ஆராய்வதற்கும் மற்றும் பெல்ஜியம் சுற்றுலா இயக்குனர்கள், சுற்றுலா எழுத்தாளர்கள் மற்றும் ஏனைய சுற்றுலா வல்லுநர்களுடன் மீண்டும் இணையும் முகமாக சுற்றுலாவிற்காக இலங்கை பாரிய அளவில் திறந்திருக்கும் என்ற செய்தியைத் தெரிவிப்பதே இந்த செயலமர்வின் நோக்கமாகும். சுமார் 30 சுற்றுலா இயக்குனர்கள் மற்றும் முகவர்கள், சுற்றுலா சார்ந்த ஊடகவியலாளர்கள், சுற்றுலா ஊடக மற்றும் தொலைக்காட்சி வல்லுநர்கள், சுற்றுலாப் பதிவர்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பெல்ஜியம் சுற்றுலாத் துறையில் தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வுக்குத் தலைமை தாங்கிய பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், #“Hello Again” என்ற ஹேஷ் டெக்குடன் இலங்கை மீண்டும் ஒருமுறை உலக சுற்றுலாவுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு நாட்டை மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான இடமாக மாற்றுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பயணிகளுக்குப் பொருந்தும் தற்போதைய சுகாதார விதிமுறைகள், இலங்கையில் உள்ள சுற்றுலாத் தலங்கள், ஆரோக்கியம் மற்றும் மருத்துவ சுற்றுலா, யாத்திரை சுற்றுப்பயணங்கள், பறவைகளைப் பார்த்தல், பட்டம் விடுதல், திமிங்கலம் மற்றும் டொல்பின்களைப் பார்த்தல், உலாவல் மற்றும் ஆழ்கடல் நீச்சல், சிறப்பாக உண்ணும் சமையல் கலை, மைஸ் சுற்றுலா, தேனிலவு சுற்றுலா மற்றும் கப்பல் பயணங்கள் போன்ற புதிய அபிவிருத்தியடைந்து வரும் முக்கிய சந்தைப் பிரிவுகள் குறித்து தூதுவர் ஆசிர்வாதம் விரிவாக விளக்கினார். உலகப் புகழ்பெற்ற ஊடகங்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களால் உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை பெற்றுள்ள சர்வதேசப் பாராட்டுக்களையும் தூதுவர் எடுத்துரைத்தார்.

ஏன்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் மொனிக் டி டெக்கர் மற்றும் வோக்கர்ஸ் டுவர்ஸின் பயண நிபுணரான ருவான் டி அல்விஸ் ஆகியோர் முறையே பிளெமிஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் விளக்கங்களை வழங்கினர். இலங்கை பயணத் துறையுடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பெல்ஜிய சுற்றுலா அமைப்பாளர்களின் சங்கத்தின் சபை உறுப்பினர் போல் ரிக்கேசிஸ், பெல்ஜியப் பயணிகளின் விடுமுறைக்கான மிகவும் சாதகமான இடமாக இலங்கையைப் பரிந்துரைத்தார். இந்த செயலமர்வின் போது மேலதிக தகவல்களைப் பெறுவதில் மிகுந்த ஆர்வத்தைக் காட்டிய பங்கேற்பாளர்கள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடினர். பலதரப்பட்ட இயற்கை அழகுகள் மற்றும் பிரமாண்டங்கள், வண்ணமயமான கடற்கரைகள் மற்றும் பல சுற்றுலாத் தலங்களுடன், இலங்கையை பூமியில் ஒரு சிறிய அதிசயமாக இந்த செயலமர்வு காட்டியது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பெல்ஜியப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. 2010 இல் சுமார் 5300 பெல்ஜியப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், இது 2018 இல் 17,500 ஆக அதிகரித்துள்ளது.  2019இல் உயிர்த்த ஞாயிறு தினக் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த போதிலும், அந்த ஆண்டில் சுமார் 15,000 பெல்ஜியப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இலங்கைத் தூதரகம்,

பிரஸ்ஸல்ஸ்.

2021 நவம்பர் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close