முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்த 50 வது ஆண்டு நிறைவை இலங்கையும் வியட்நாமும் 2020 ஜூலை 21 ஆந் திகதி நினைவுகூர்கின்றன. 1970 இல் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டாலும், இலங்கை மற்றும் வியட்நாமின் ஆழமான வேரூன்றிய உறவு பல நூற்றாண்டுகளாக நீடிக்கின்றது.
நவீன வியட்நாமின் நிறுவுனரான மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின், 1911, 1928 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவுக்குச் செல்லும் வழியில் இலங்கைக்கு ஏராளமான விஜயங்களை மேற்கொண்டார். பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் வியட்நாமுக்கு ஆதரவளித்த முதலாவது நாடுகளில் ஒன்றான தீவிர நட்பு நாடாக செயற்பட்ட ஒரு தேசத்தால் ஜனாதிபதி ஹோ சி மின் அப்போது அன்புடன் வரவேற்கப்பட்டார்.
இருதரப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு இராஜதந்திரத்தில் இலங்கையும் வியட்நாமும் இணைந்து சமமான உறவுகளை அனுபவிக்கின்றன. இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பானது அரசியல், வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி, சுற்றுலா, விவசாயம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்துகின்றது. மேலும், இலங்கை - வியட்நாம் நாடாளுமன்ற நட்புக் குழுவானது இலங்கை நாடாளுமன்றத்துக்கும், வியட்நாமின் தேசிய சட்டமன்றத்துக்குமிடையே நல்லுறவைப் பேணுகின்றது. இரு நாடுகளின் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட உயர் மட்ட விஜயங்களால் இந்த வலுவான உறவு அடையாளப்படுத்தப்படுகின்றது.
மேலும், இலங்கையும் வியட்நாமும் நெருக்கமான வர்த்தக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. 2019 ஆம் ஆண்டின் மொத்த வர்த்தக அளவு 381 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததுடன், அதில் வியட்நாமிலிருந்து 302 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைகளை 2019ஆம் ஆண்டில் இலங்கை இறக்குமதி செய்து, 79 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைகளை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்தது.
முதலீட்டைப் பொறுத்தவரை, இலங்கையின் முன்னணி ஆடைத் தொழில்துறை நிறுவனங்களான ஹிட்ரமணி குழுமம் மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவை ஹா நோய், ஹோ சி மின் நகரம், டா நாங் போன்றவற்றில் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் 10,000 க்கும் மேற்பட்ட வியட்நாம் நாட்டினரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இலங்கையின் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பாளரான நேச்சர்ஸ் சீக்ரெட் நிறுவனம் வியட்நாமிலும் அதன் தடத்தை நிறுவியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த முக்கியமான மைல்கல்லைப் பற்றிய தனது அன்பான வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் கட்சியின் பொதுச் செயலாளரும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் தலைவருமான குயென் பு ட்ரொங் அவர்களுக்குத் தெரிவித்தபோது, பரஸ்பர நம்பிக்கை, நட்பு மற்றும் மரியாதை ஆகியவற்றில் வேரூன்றியுள்ள இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளின் வளமான வரலாற்றை நினைவு கூர்ந்தார். 2020 ஆம் ஆண்டில் ஆசியானுக்கு தலைமை தாங்கியமைக்கும், 2020-21 காலத்திற்கான ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமற்ற உறுப்பினராக செயற்படுவதற்கும், மற்றும் நாட்டின் கோவிட்-19 நிலைமையை திறம்பட கட்டுப்படுத்தியமைக்குமாக வியட்நாமுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
வியட்நாம் சோசலிசக் குடியரசின் பிரதம மந்திரி குயென் சுவான் பூக்கிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஷ, தலைமுறை தலைமுறையான தலைவர்கள் மற்றும் மக்கள் மூலமாக இரு நாடுகளுக்குமிடையில் நிலவிய பகிரப்பட்ட மதிப்புக்கள் மற்றும் ஆழமான நேர்மை போன்றவற்றை அங்கீகரித்தார். கடந்த 90 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் வியட்நாம் மேற்கொண்ட மகத்தான சாதனைகளுக்கு பிரதமர் ராஜபக்ஷ மேலும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த முக்கியமான மைல்கல் தொடர்பில், வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன வியட்நாமின் பிரதிப் பிரதம மந்திரி பாம் பின் அவர்களைப் பாராட்டினார். கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவு கூர்ந்த அமைச்சர் குணவர்தன, பிராந்திய மற்றும் பலதரப்பு அரங்குகளில் வியட்நாமின் உற்பத்திப் பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். இந்த முக்கியமான அடையாளத்தைக் கொண்டாடுவதிலிருந்து கோவிட்-19 தொற்றுநோய் இரு நாடுகளையும் தடுத்திருந்தாலும், எதிர்வரும் ஆண்டில் பொருத்தமான கொண்டாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்படும் என அவர் நம்புவதாகத் தெவித்தார்.
கொண்டாட்டங்கள் மிகுந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தலைவர்கள் தமது வியட்நாம் சகாக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.