2024 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி பீஜிங்கில் நடைபெறவுள்ள சீன மக்கள் குடியரசுடனான 13வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இலங்கையின் தூதுக்குழுவை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை தாங்குவார். அவர் சீன மக்கள் குடியரசின் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் சன் வீடாங்குடன் ஆலோசனை அமர்வுகளுக்கு இணைத் தலைவராக செயலாற்றுவார்.
அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டிற்கான துறைகளில் முன்னேற்றம் குறித்து இந்த விவாதங்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாலோசனைகளுக்கான இலங்கையின் தூதுக்குழுவில் பீஜிங்கில் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் மஜிந்த ஜயசிங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவில் அமைந்துள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.
இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் 12வது சுற்று, 2023, மே 30 அன்று கொழும்பில் இடம்பெற்றது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூன் 14