விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுடன் 2021 ஜனவரி 06ஆந் திகதி குடியரசுக் கட்டிடத்தில் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். நல்லுறவு ரீதியான இந்தக் கலந்துரையாடல்களின் போது, பொருளாதாரம், நிதி, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு, கலாச்சாரப் பரிமாற்றங்கள், காவல் மற்றும் பாதுகாப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் பல பகுதிகளை உள்ளடக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
பல நூற்றாண்டுகள் பழமையான வலுவான கலாச்சாரப் பிணைப்புக்களின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்ட இரு நாடுகளினதும் மக்களுக்கும் செழிப்பைக் கொண்டுவருவதற்கான தயார்நிலையை பிரதிபலிக்கும் காத்திரமான ஈடுபாட்டின் தற்போதைய வேகத்தைத் தொடருவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். கோவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் முதல் கடந்த பல மாதங்களாக சுகாதாரத் துறையினருக்கு அளித்த மகத்தான உதவிகளுக்காக இலங்கைத் தரப்பினர் இந்தியாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்வதில் அண்டை நாட்டிற்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை கலாநிதி. ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார்.
பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதனை உறுதிசெய்யும் நோக்கில், பயணக் குமிழி கருப்பொருளின் மூலம் பொருத்தமான கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா மற்றும் விமான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்தியத் தரப்பினரால் முன்மொழியப்பட்டது. இலங்கையில், குறிப்பாக உத்தேச மருந்து மற்றும் ஆடை உற்பத்தி வலயங்களில், இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமாக அதிகரிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன அழைப்பு விடுத்தார். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், விருந்தோம்பல், சுற்றுலா, விவசாயம், உணவுகளைப் பதப்படுத்துதல், கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற உடனடி முதலீடுகளுக்கான ஏனைய துறைகளில் உள்ள சாத்தியப்பாடுகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.
சமூக அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் மேம்படுத்தப்பட்ட இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்புக்களைப் பாராட்டிய அமைச்சர் குணவர்தன, அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பான 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' க்கு அமைய புதிய முயற்சிகளை செயற்படுத்துவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். உள்நாட்டு முன்னுரிமைகள் குறித்து அறிந்துள்ள இந்தியா, விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொழில்நுட்பம், கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி ஆகியவற்றிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் உறுதியளித்தார். இலங்கையில் தொழிற்பயிற்சி மையங்களை நிறுவுவதற்கான இந்தியாவின் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
நேற்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் காத்திரமான கலந்துரையாடல்களில் ஈடுபட்ட வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர், இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து புதுடெல்லிக்குப் புறப்படுவதற்கு முன்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் சந்தித்தார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜனவரி 07