வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் மாண்புமிகு சூலாமணி சார்ட்சுவன் 2021 ஜனவரி 08ஆந் திகதி பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார். இலங்கையில் குறிப்பாக பெருந்தோட்ட மற்றும் விவசாயத் துறைகளில் தாய்லாந்திற்கு முதலீடு செய்யக்கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கு தலைமை தாங்குவதற்காக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இருவரும் அங்கீகரித்தனர். வர்த்தக உறவுகளைப் பொறுத்தவரையில், பயன்படுத்தப்படாத திறன்கள் அதிகம் இருப்பதாகவும், 2018ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட மூலோபாய பொருளாதாரக் கூட்டுறவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த பயன்படுத்தப்படாத பகுதிகளை புத்துயிர் பெறச் செய்யலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அமைச்சருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த தூதுவர், இலங்கையில் மூன்று ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் பணியாற்றியுள்ளதாகவும், சிறந்த உறவுகளை கட்டியெழுப்புவதற்காகவும், இலங்கை மற்றும் தாய்லாந்தின் பரஸ்பர நலன்களை ஊக்குவிப்பதற்காகவும், மக்கள் தொடர்புகளை உருவாக்குவதற்காகவும் தனது பதவிக்காலத்தில் பாக்கியம் அடைந்ததாக உணர்வதாக தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை வலியுறுத்திய வெளிநாட்டு அமைச்சர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் (யு.என்.எச்.ஆர்.சி) மற்றும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) போன்ற சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு அளித்த ஆதரவுகளுக்காக தாய்லாந்துக்கு நன்றிகளைத் தெரிவித்தார். பிம்ஸ்டெக்கின் தலைமைப் பதவியில் இலங்கைக்கான தாய்லாந்தின் ஆதரவை தூதுவர் உறுதிப்படுத்தினார். கல்யாண மித்ர தேசமாக தாய்லாந்து கடினமான காலங்களில் இலங்கையுடன் காணப்பட்டுள்ளது.
பௌத்தம், பயிற்சி, அறிவுப் பரிமாற்றம் போன்ற துறைகளில் தாய்லாந்து இலங்கைக்கு வழங்கிய அபிவிருத்தி ஒத்துழைப்புக்களுக்காக நன்றிகளைத் தெரிவித்த அமைச்சர், தாய்லாந்து வழங்கிய விவசாயம் மற்றும் பயிற்சி இலங்கைக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான முக்கிய இணைக்கும் சக்தியாக பௌத்தம் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் குணவர்தன, சுற்றுலா மற்றும் வணிக நோக்கத்திற்காக பல இலங்கையர்கள் பேங்கொக்கிற்கு விஜயம் செய்வதாக குறிப்பிட்டதுடன், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் வளர்ந்து வரும் உறவு அவர்களின் உறவுகளுக்கான ஒரு தகைமையாகும் என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற உயர்மட்ட அதிகாரிகளின் விஜயம் இலங்கை - தாய்லாந்து உறவுகளை ஊக்குவித்து பலப்படுத்தியதாகவும், இதுபோன்ற விஜயங்கள் எதிர்காலத்திலும் தொடரும் என நம்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜனவரி 10