'இலங்கையில் பிறந்த' என்ற குறிச்சொல்லுடன் 'சிலோன் கறுவா' மெல்பேர்னில் ஊக்குவிப்பு

 ‘இலங்கையில் பிறந்த’ என்ற குறிச்சொல்லுடன் ‘சிலோன் கறுவா’ மெல்பேர்னில் ஊக்குவிப்பு

கடந்த வாரம் மெல்பேர்னில் நடாத்தப்பட்ட 'இலங்கையில் பிறந்த சிலோன் கறுவா'  என்ற தலைப்புடன் கூடிய மெய்நிகர் நிகழ்வானது,  விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா போன்ற அவுஸ்திரேலிய மாநிலங்களில் சிலோன் கறுவாவை ஊக்குவிப்பதற்காக இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இலங்கைக் கறுவாவின் பல்வேறு ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் செயன்முறை, அவுஸ்திரேலிய விதிமுறைகள் மற்றும் சந்தை இயக்கவியல் ஆகியவற்றில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் அவுஸ்திரேலியாவில் சிலோன் கறுவாவிற்கான சந்தை ஆர்வத்திற்கு புத்துயிர் அளிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

விளக்கமளிப்பவர்கள் இந்தத் தலைப்பில் பல தகவல்களையும் நுண்ணறிவுகளையும் வழங்கினர். உலக கறுவா உற்பத்தியில் 80மூ  க்கும் அதிகமான நாடுகளுக்கு 'உண்மையான கறுவா' வை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடான இலங்கை, 2020ஆம் ஆண்டில் சுவையூட்டிப் பொருட்களில் இருந்து 335 மில்லியன் டொலர் மொத்த வருமானத்தில் 56மூ ஐ கறுவாவிலிருந்து மட்டுமே ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கறுவா உற்பத்தித் திறன் 21,000 மெட்ரிக் டொன் ஆவதுடன், ஏற்றுமதி அளவு 19,000 மெட்ரிக் டொன் ஆகும் அதே வேளை, ஆண்டுக்கு 25,000 - 30,000 மெட்ரிக் டொன் வரை விரிவாக்கம் செய்யும் திறன் கொண்டது. கறுவாவை மையமாகக் கொண்டு இலங்கையின் சுவையூட்டிப் பொருட்களின் தேசிய முத்திரை இந்த திசையில் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை வழங்குகின்றது. தரத்தில் குறைந்த மற்றும் ஏனைய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் காசியா சர்வதேச சந்தையில் கறுவாவிற்கான முக்கிய போட்டியாளராக இலங்கை மாறியுள்ளது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் இனோகா வனசிங்க மற்றும் எச்.டி.டி.ஈ. இன் பொது முகாமையாளர் சுமித் பொன்னம்பெரும ஆகியோர் விளக்கவுரைகளை வழங்கியதுடன், துணைத் தூதுவர் கபில பொன்சேகா மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் சந்தை அபிவிருத்திப் பணிப்பாளர் அனோமா பிரேமதிலக ஆகியோர் ஆரம்ப உரைகளை நிகழ்த்தினர்.

அவுஸ்திரேலியாவில் கறுவா நுகர்வில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே சிலோன் கறுவாவிலிருந்து கிடைப்பதுடன், அவுஸ்திரேலிய சந்தையில் இலங்கை கறுவாவுக்கு அபரிமிதமான வளர்ச்சி சாத்தியம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய தரநிலைகள் மற்றும்  ஒழுங்குமுறைத் தேவைகள் குறித்து குறிப்பிடுகையில், விக்டோரியன் வணிக சபையின் சர்வதேச வணிக அபிவிருத்தி முகாமையாளர் எட்டி ஜாவோ அவுஸ்திரேலியாவின் கடுமையான உயிர்ப் பாதுகாப்பு விதிகளை விளக்கினார். சில தயாரிப்புக்கள் இறக்குமதி நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படலாம் அல்லது சம்பந்தப்பட்ட அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு ஆதரவு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம் மற்றும் சிலவற்றிற்கு இறக்குமதி அனுமதிகள் தேவைப்படலாம் என அவர் குறிப்பிட்டார். இது சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரசபையான அவுஸ்திரேலிய விவசாயம், நீர் மற்றும் சுற்றுச்சூழல் திணைக்களத்தை அதன் இணையதளமான www.awe.gov.au மூலம் அணுக முடியும்.

சிட்ரோ எசென்ஷியல் அவுஸ்திரேலியாவின் உரிமையாளர் உபுல் குலரத்ன இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு கறுவாப் பொருட்களை இறக்குமதி செய்வதில் தனது தனிப்பட்ட அனுபவத்தை விளக்கினார். புதிய இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்  அவுஸ்திரேலியாவில் உள்ள தனிப்பயன் அனுமதி முகவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கும், அவுஸ்திரேலியாவுடன் வர்த்தகத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அவுஸ்திரேலிய உயிர்ப் பாதுகாப்புத் தேவைகள் குறித்த அவர்களின் அறிவை மேலும் அதிகரிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

நிகழ்வின் சிறப்பம்சமாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையின் பாடல் இசைக்கும் சமையல்காரர் டொன் ஷெர்மனின் செயல் விளக்கம் அமைந்திருந்ததுடன், இதன் போது அவர் இலங்கை கறுவாவை மூலப்பொருளாகப் பயன்படுத்தி இலங்கையின் பாரம்பரிய உணவு  வகைகளைத் தயாரித்தார்.

அவுஸ்திரேலியா - இலங்கை வர்த்தக சபை மற்றும் அவுஸ்திரேலியா - இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மெல்பேர்னில் உள்ள இலங்கைத் தூதரகமும் இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த வெபினாரில் அவுஸ்திரேலியாவிலுள்ள இறக்குமதியாளர்கள், இலங்கையிலுள்ள ஏற்றுமதியாளர்கள், தூதரகப் படையணின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை  ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு, துணைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக ஊக்குவிப்பு நிகழ்வுகளின் மிகச் சமீபத்திய நிகழ்வாகும்.

இலங்கையின் துணைத்தூதரகம்,

மெல்பேர்ன்

2021 டிசம்பர் 14

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close