இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது பணிகளைத்  தொடங்குவதற்குத் தயார்

 இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது பணிகளைத்  தொடங்குவதற்குத் தயார்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் பயிற்சி பெற்ற தாதியர் குழுவிற்கான நியமனக் கடிதங்களை, 2022 ஆகஸ்ட் 25 ஆந் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் வைத்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கையளித்தார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன், இலங்கையின் வெலிசரவில் உள்ள சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தாதியர்களின் முதல் தொகுதி இதுவாகும்.

நியமனக் கடிதங்களைப் பெற்றவர்களை வாழ்த்திப் பேசிய அமைச்சர் சப்ரி, மிகவும் அபிவிருத்தியடைந்த சுகாதார அமைப்பில் ஒரு சிறந்த தொழிலை நோக்கிய அவர்களது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளதாகவும், அக்கறையுள்ள இலங்கை நிபுணர்கள் என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்புவதில் எமது நாட்டின் பிரதிநிதிகளாக இருப்பதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 'உங்கள் வெற்றிகரமான தொழில், எதிர்காலத்தில் இலங்கைக்கான மேலதிக வாய்ப்புக்களை உறுதி செய்யும். உங்களின் நிபுணத்துவம் மற்றும் பயிற்சியின் மூலம், ஐக்கிய இராச்சியத்தில் எமது  நற்பெயரை தொடர்ந்தும் மேம்படுத்துவீர்கள் என்று நான் நம்புகின்றேன்' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நாணயங்களை அனுப்பும் தொகையை அதிகரிப்பதற்கான அனைத்து வழிகளையும் நாடு ஆராய்ந்து வரும் வேளையில், இலங்கை இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு இது வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டி, சுகாதாரக் கல்வி மற்றும் பயிற்சித் துறையில் தொலைநோக்குப் பார்வையுடன் ஈடுபட்டுள்ள சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அதன் இணை நிறுவனங்களுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார, நியமனக் கடிதங்களைப் பெற்றவர்கள் மற்றும் இத்திட்டத்துடன் தொடர்புடைய ஏனைய பங்குதாரர்களை ஊக்குவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின்  ஸ்தாபகர் கலாநிதி நிஹால் டி சில்வா, சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் இணை நிறுவனர் கலாநிதி கித்சிறி எதிரிசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஆகஸ்ட் 28

Please follow and like us:

Close