இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடல்

இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடல்

வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தூதுவர் டெனிஸ் சாய்பியை ஆகஸ்ட் 20 ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் பரந்த ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நல்கிய ஆதரவுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடியதுடன், தடுப்பூசிகள் உலகளாவிய ரீதியில் சமமாகக் கிடைத்தல் மற்றும் ஆராய்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றுக்கான கோவெக்ஸ் வசதிக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்புக்களுக்கு தனது உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இலங்கையின் கடலோரப் பகுதியில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கடல் சுற்றுச்சூழல் பேரழிவுக்குப் பின்னர், எதிர்காலத்தில் இலங்கையின் அனர்த்த ஆயத்தத்தை மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருக்கு அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கட்டமைப்பிற்குள் இலங்கையின் வழக்கமான ஈடுபாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு செயன்முறையின் கீழ் இருக்கும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பணிகள் குறித்தும், கூட்டு ஆணைக்குழுவின் குடையின் கீழ் தொடர்புடைய பணிக்குழுக்களைக் கூட்டுவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மீண்டும் வலியுறுத்தினார். மீன்வளத் துறையிலான ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 ஆகஸ்ட் 23

Please follow and like us:

Close