இலங்கையின் 74வது சுதந்திர தினம் 2022 பெப்ரவரி 04ஆந் திகதி வெள்ளிக்கிழமை பங்களாதேஷின் டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரக ஊழியர்களின் பங்களிப்புடன் நினைவுகூரப்பட்டது.
உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானது. தற்போதைய கோவிட்-19 சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, பங்களாதேஷில் உள்ள பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதப் பிரமுகர்களால் வீடியோப் பதிவுகள் மூலமாக மத அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் நேரடி ஒளிபரப்பின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி காட்சிப்படுத்தப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு தீவாக, கலை, கட்டிடக்கலை, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த புத்தாக்கங்களின் மிக அற்புதமான எச்சங்களை உலகிற்கு இலங்கை பரிசாக வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களாதேஷில் உள்ள இலங்கை சமூகம் நல்கிய பங்களிப்பிற்காக நன்றிகளைத் தெரிவித்த அவர், தாய்நாட்டிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டார்.
உத்தியோகபூர்வ நிகழ்வைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரக ஊழியர்கள் பாரம்பரிய பால் சோறு மற்றும் இலங்கை இனிப்பு வகைகளுடன் கூடிய எளிமையான காலை உணவு நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
டாக்கா
2022 பிப்ரவரி 11