வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர உறுப்பினர்களுக்கு 2022 ஜூன் 02ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து விளக்கமளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தனது உரையின் போது, இலங்கையில் நிலவும் நிலைமை மற்றும் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மின்வெட்டு போன்ற அழுத்தமான பிரச்சினைகளை உள்ளடக்கிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக் காட்டினார். இது தொடர்பான நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முனனெடுத்த நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தேவைப்படும் நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு தூதுவர்களை கேட்டுக் கொண்டார். அவர் தனது உரையில், பாராளுமன்றத்தில் உள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தத்தையும் குறிப்பிட்டதுடன், இந்த முக்கியமான சட்டத்தின் சில முக்கிய அம்சங்களையும் சுட்டிக் காட்டினார்.
இராஜதந்திர உறுப்பினர்களின் பங்கேற்பிற்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் குறிப்பாக சவாலான ஒரு கட்டத்தில் தமது ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வழங்குமாறு தூதுவர்களைக் கேட்டுக்கொண்டார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சுருக்கமான விளக்கங்களை முன்வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவும் இணைந்திருந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூன் 02