இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2022 பெப்ரவரி 10ஆந் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மாலைப்பாடல் ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.
இந்த சேவையில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, இராஜதந்திர அதிகாரிகள், உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பிராந்தியத் தலைவர், இலங்கை - ஐக்கிய இராச்சிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் இலங்கை வங்கி (ஐக்கிய இராச்சியம்) லிமிடெட் அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆராதனையின் போது இலங்கைக்கும் அதன் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அர்ச்டீகன் மற்றும் கேனான் ஸ்டீவர்ட் வெனரல் ட்ரிசியா ஹில்லாஸ் ஆகியோர் முதல் பாடத்தை வாசித்ததுடன், இரண்டாவது பாடத்தை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன வாசித்தார்.
மாலைப்பாடல் ஆராதனை நிகழ்வின் நினைவாக, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இலங்கையின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மதக் கட்டிடங்களில் ஒன்றான வெஸ்ட்மின்ஸ்டர் அபே, 1066 முதல் முடிசூட்டு தேவாலயமாக இருந்து வருகின்றது. மேலும் இது 17 மன்னர்களின் இறுதி இளைப்பாறும் இடமாகவும், அரச தலைவர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், போர்வீரர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட பிரிட்டனின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க சில மனிதர்களின் இறுதி ஓய்வு இடமாகவும் உள்ளது. இது கி.பி. 960 இல் பெனடிக்டைன் துறவிகளால் நிறுவப்பட்டது. இன்றுவரை, அபே கிறிஸ்தவ வழிபாடு மற்றும் வரவேற்பு பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
லண்டன்
2022 பிப்ரவரி 24