இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம் துருக்கியின் அண்டலியாவில் அங்குரார்ப்பணம்

 இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம் துருக்கியின் அண்டலியாவில் அங்குரார்ப்பணம்

2021 நவம்பர் 06 ஆந் திகதி அன்டலியா மாகாணத்தின் அலன்யாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின் போது துருக்கியின் அன்டலியாவிற்கான இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம் துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் மெவ்லட் சவுசோக்லு, துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ரிஸ்வி ஹஸன், அன்டலியா மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அன்டலியாவில் உள்ள பிராந்திய மற்றும் மாவட்ட மேயர்கள், வணிக சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் அன்டலியா ஆளுநரகத்தின் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் மெவ்லட் சவுசோக்லு, இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகத் தெரிவித்தார். இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு துருக்கி விரும்புவதாக வெளிநாட்டு அமைச்சர் சவுசோக்லு தெரிவித்தார். ஏற்றுமதிப் பொருட்களை பல்வகைப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளினதும் சாத்தியங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் குறித்தும் அமைச்சர் வலியுறுத்தினார். துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று உறவுகளையும் அமைச்சர் சவுசோக்லு நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் அன்டலியாவின் சுற்றுலா மையத்தில் கௌரவ துணைத் தூதரகத்தை திறப்பதன் மூலம் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை அதிகரிப்பதற்கு அன்டலியா மாகாணத்தில் நிலவும் வாய்ப்புக்களை ஆராய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தூதுவர் தனது கருத்துக்களில் தெரிவித்தார். கௌரவ துணைத் தூதரக அலுவலகம் இலங்கை மற்றும் துருக்கியிலுள்ள வர்த்தக சமூகங்களை இணைக்கும் நோக்கில் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆலன்யாவின் கௌரவ துணைத் தூதரகமாக நியமிக்கப்பட்ட திரு. அலி கம்புரோஸ்லுவிடம், தூதுவர் நியமன ஆவணத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

திரு. கம்புரோஸ்லு தனது கருத்துக்களின் போது இலங்கைக்கு புதிய வர்த்தக வாய்ப்புக்கள் மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்காக அன்டலியா பிராந்தியத்தில் இலங்கையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை உறுதி செய்தார்.

ஆலன்யா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் திரு. மெஹ்மத் ஷாஹினும் இந் திகழ்வில் உரையாற்றியதுடன், வர்த்தக தூதுக் குழுவொன்றுக்கு தலைமை தாங்கி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2021 நவம்பர் 12

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close