இலங்கையின் கண்ணோட்டத்தை பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் முன்வைப்பு

இலங்கையின் கண்ணோட்டத்தை பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் முன்வைப்பு

பிரெஞ்சுக் குடியரசின் செனட்டில் இடம்பெற்ற பிரான்ஸ் - இலங்கை நட்புறவுக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான காலை உணவு சந்திப்பில் கௌரவ விருந்தினராக வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொண்டார்.

குறிப்பாக தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரான்ஸ் தலைமை தாங்கும் பின்னணியில், இலங்கை  மீது செலுத்தப்படுகின்ற நீடித்த அக்கறைக்காக பேராசிரியர் பீரிஸ் பிரான்ஸ் செனட்டர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

சுற்றுலா, வெளிநாட்டுப் பணம் மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து பெற்றுக் கொள்ளுகின்ற அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள கணிசமான குறைவு குறித்த விஷேட குறிப்புடன், நாட்டின் பொருளாதாரத்தில் கோவிட் தொற்றுநோயின் பாதகமான தாக்கம் தொடர்பாக இலங்கையின் தற்போதைய சவால்கள் குறித்த விளக்கத்தை அவர் வழங்கினார். நாடு தற்போது படிப்படியாக மீண்டு வருவதுடன், பொருளாதார நிறுவனங்களின் நிலையான மறுமலர்ச்சியையும் காண்பதாக அவர் விளக்கினார்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் குடியரசின் செனட்டர்களுக்கு அமைச்சர் விளக்கினார். காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நிலையான அபிவிருத்தி 16 இலக்குகள் பேரவை மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவை போன்ற உள்நாட்டு பொறிமுறைகளின் முன்முயற்சிகள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதியரசர் ஒருவரின் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை தற்போது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் நீண்டகால நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று தமது பணியை நிறைவு செய்யவுள்ளதுடன், அவர்களது அறிக்கை முன்கூட்டியே சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 42 வருடகால பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான திருத்தங்களுக்கு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மார்ச் முதல் வாரத்தில் விவாதிக்கப்படவிருப்பதாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா செல்லவுள்ளதாக  தெரிவித்த அமைச்சர், அண்மைக்காலத்தில் இலங்கை மேற்கொண்ட கணிசமான நடவடிக்கைகள் தொடர்பில் பிரான்ஸ் குடியரசின் புரிதலை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போது, பொருளாதாரம், துறைமுக நகருக்கு பொருந்தக்கூடிய முதலீட்டு நடைமுறைகள், நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி முறைகள், தொழிலாளர் விவகாரங்கள், பாலின முன்முயற்சிகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை முன்னோக்குகள் தொடர்பான பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் பேராசிரியர் பீரிஸின் விஜயம் மற்றும் தகவல் விளக்கத்திற்காக செனட் சபையின் பிரான்ஸ் - இலங்கைக் குழுவின் தலைவரான செனட்டர் ஜோயல் குரேரியோ நன்றிகளைத் தெரிவித்தார். அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ள இலங்கைக்கான விஜயத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அங்கிருந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2022 பிப்ரவரி 24

Please follow and like us:

Close