2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன அவர்கள் வாசித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
அநுராதபுரம் ருவன்வெலிசேயவில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், தனது வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் சுபீட்சத்திற்காக தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்காக கைகோர்க்குமாறு நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
பௌத்த தத்துவத்தின் சமத்துவம் மற்றும் நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தான் இந்த நாட்டை வழிநடத்தவுள்ளதாக தெரிவித்ததோடு தேசத்தின் பாரம்பரிய மரபுரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்காக அரச அனுசரணையை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், நாட்டு மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரே சக்தியாக செயற்பட வேண்டிய தருணம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு ஒரு மக்கள் மைய அரசாங்கம் அவசியம் என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தாய்நாட்டை பாதுகாப்பதற்காக அரச பாதுகாப்பு பொறிமுறை பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
தனது வெளிநாட்டு கொள்கை தொடர்பாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, வெளிநாட்டு கொள்கைகளில் நடுநிலையான நிலைப்பாட்டை பேண விரும்புவதாகவும் உலக அதிகார சக்திகளுக்கிடையிலான முரண்பாடுகளிலிருந்து விலகியிருக்க விரும்புவதாகவும் தெரிவித்ததோடு ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு இலக்குகளை அடைந்துகொள்வதற்காக தான் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் எப்போதும் சமூகத்திற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் எனவும் தொழில்வான்மையும் வினைத்திறனும் அரசாங்க நிர்வாகத்துறையின் அடிப்படையாக விளங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எல்லா சந்தர்ப்பங்களிலும் செயற்திறனும் தொழில் வல்லுனராட்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தமது நிர்வாகத்தின் கீழ் ஊழலுக்கு இடமில்லை என்பதை வெளிப்படுத்தியதோடு இலங்கையின் இறைமையை ஏனைய நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தல் இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்தின் அவசியத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்ததோடு இந்த முன்மாதிரி அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளிலும் வேண்டும் எனவும் அரச நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தனது கொள்கைகளை முன்னெடுப்பதற்காக ஒரு புதிய அரசாங்கத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்வது தனது பொறுப்பாகும் எனவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
“நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாடு குறித்து பெருமைப்படுகிறேன். எனது நாட்டுக்கென என்னிடம் ஒரு தொலைநோக்கு இருக்கின்றது. ஆகையால் இந்த பயணத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்ததன் பின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை.. – (2019.11.18 – ருவன்வெலிசேய)
மகாநாயக்க தேரர், அநுநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரே!
கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் உள்ளிட்ட ஏனைய மதகுருமார்களே!
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே!
கௌரவ பிரதமர் அவர்களே! நீதியரசர் அவர்களே! உயர்ஸ்தானிகர்களே! தூதுவர்களே! பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளே! இலங்கை குடி மக்களே!
புத்த பெருமானின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க சுவர்ணமாலி மகாசேய புனிதஸ்தலத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றக் கிடைத்தமையை எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். இந்த நாட்டின் பெருமளவு மக்கள் எனக்குப் பெற்றுக்கொடுத்த மக்கள் ஆணையினாலேயே இலங்கை மன்னராட்சி வரலாற்றில் மிகவும் சிரேஷ்ட மன்னராகிய துட்டகைமுனு மன்னனின் உருவச்சிலைக்கு முன்னால் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது. நாம் அனைவரும் மிகவும் நேசிக்கும் இந்த தாய் நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி, முப்படைகளின் தளபதி, உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறவேண்டிய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலேயே நான் உங்களுடன் உரையாற்றுகின்றேன்.
முதற்கண் எனது இந்த வெற்றிக்கு பாரிய பக்கபலமாக அமைந்தது நாட்டின் நாலாதிசையிலும் இருந்து மகாசங்கத்தினர் எனக்கு பெற்றுத்தந்த நல்லாசிகளே என்பதை மிகுந்த கௌரவத்துடன் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையப்போவது இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களே என்பதை நான் ஆரம்பம் முதலே அறிந்திருந்தேன். சிங்கள மக்களின் ஆதரவினால் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலை வெல்ல முடியும் என்பதை நான் அறிந்திருந்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் எனது வெற்றியின் பங்குதாரிகளாக என்னோடு இணைந்து கொள்ளுங்கள் என அவர்களுக்கு கோரிக்கை விடுத்தேன். ஆயினும் அவர்களது பதில் நான் எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. ஆயினும் உங்களது புதிய ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்காக உண்மையான இலங்கையர்கள் என்ற வகையில் என்னோடு இணைந்து கொள்ளுமாறு மீண்டும் நான் அவர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வேளையில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது கௌரவம் கலந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு எனக்காக வாக்களிக்காவிட்டாலும் ஜனநாயக வாக்குரிமைக்கு மதிப்பளித்து இதர வேட்பாளர்களுக்கு தமது பெறுமதியான வாக்கினைப் பெற்றுக்கொடுத்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தென்னிலங்கையின் சிங்கள பௌத்த குடும்ப பின்னணியைக் கொண்ட நான் கொழும்பின் முன்னணி பௌத்த பாடசாலையாகிய கொழும்பு ஆனந்தா கல்லூரியிலேயே கல்வி கற்றேன். அதனால் பௌத்த கோட்பாடு எனது சிந்தனைகளிலும் செயல்களிலும் ஒன்றுகலந்திருக்கின்றன. பௌத்த கோட்பாடானது நீதி, நியதி, சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தார்மீக இராச்சியத்தையும் அனைத்து இனத்தவருக்கும் மதத்தவருக்கும் பசுமையான நிர்வாக முறையினையுமே வேண்டி நிற்கின்றது. எனது பதவிக் காலத்தினுள் இந்த நாட்டின் பௌத்த கோட்பாடுகளை பேணிப்பாதுகாத்து அவற்றைப் போஷpப்பதற்கு நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிங்கள கலாசாரத்தினையும் மரபுரிமைகளையும் நாம் எப்போதும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். ஆகையால் நமது பழக்கவழக்கங்களையும் பாரம்பரிய சம்பிரதாயங்களையும் நமது தனித்துவத்தையும் பாதுகாப்பதற்காக அரச அனுசரணை பெற்றுத்தரப்படும். தொண்டுதொட்டே இந்த நாட்டின் பிரதான கலாசாரத்துடன் இணைந்து அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்துவரும் அனைத்து இலங்கையர்களுக்கும் மத மற்றும் இன தனித்துவத்தை தக்கவைத்துக்கொண்டு அபிமானத்துடன் வாழ்வதற்கான அவர்களது உரிமையை எப்போதும் நான் பாதுகாப்பேன்.
இத்தேர்தல் செயற்பாட்டில் ஆரம்பம் முதல் இறுதி வரை எனக்கு மாபெரும் பக்க பலமாக இருந்து எனது வெற்றிக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியும் பொதுஜன முன்னணியின் தலைவருமாகிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எனது கௌரவம் கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தோடு எனது வெற்றிக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமாகிய பஷpல் ராஜபக்ஷ அவர்களுக்கும் எனது விசேட நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அத்தோடு இத்தேர்தல் செயற்பாட்டில் எமக்கு ஒத்துழைப்பை நல்கி குறிப்பிடத்தக்க பணியை ஆற்றிய, என்றும் எம்முடன் இருந்துவரும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் அங்கத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தேர்தல் செயற்பாட்டின்போது எம்முடன் இணைந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தலைமைத்துவமும் எமக்கு பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்புக்கும் நன்றி கூற விரும்புகின்றேன்.
இத்தேர்தலின்போது நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னொருபோதும் இல்லாத அளவு மிகுந்த உற்சாகத்துடன் செயற்பட்டுவருவதை நாம் கண்டோம். அந்த வகையில் இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தல் செயற்பாட்டிலும் கலந்துகொள்ளாதிருந்த இலட்சக்கணக்கான பொதுமக்கள் தமது சுயவிருப்பத்தின் பேரில் முன்வந்து எமக்கு ஒத்துழைப்பை வழங்கினார்கள். ‘புலமை வழி’ போன்ற தொழில்சார் அறிஞர்களின் அமைப்புகள், பல்வேறு தேசிய அமைப்புகள், வர்த்தகர்கள், தொழில் விற்பன்னர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், வாக்களிப்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த எமது புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் இத்தேர்தலின் வெற்றிக்காக பெற்றுக்கொடுத்த சிறந்த பங்களிப்பிற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களில் அநேகமானோரை தனிப்பட்ட விதத்தில் நான் சந்தித்திராத போதிலும் இத்தருணத்தில் நாட்டிற்காக அவர்கள் அவர்களது கடமையை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றினார்கள். அதற்காக அவ்வனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது ஒரு நாடு என்ற வகையில் ஒற்றுமையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பே எம்முன் இருக்கின்றது. உங்களது வாக்குகளை அளித்து இந்த மக்கள் ஆணையை எனக்குப் பெற்றுக்கொடுத்ததற்கான காரணம் சுபீட்சத்தின் நோக்கு எனும் எமது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் நாட்டுக்காக முன்மொழிந்த மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட, மக்களை மையமாகக்கொண்ட செயற்திட்டத்தினை செயற்படுத்துவதற்கேயாகும். அத்தோடு அது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டமாகும். அது இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வேலைத்திட்டமாகும். எதிர்கால சந்ததியினருக்கு அபிமானத்துடன் வாழக்கூடிய சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டமாகும். இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டிருந்த சகல விடயங்களையும் எனது பதவிக்காலத்தினுள் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதலை எனது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாக கருதுகின்றேன். நமது தாய்நாட்டை பயங்கரவாதம், பாதாள உலக செயற்பாடுகள், களவு, கப்பம் வாங்குவோர்கள், போதைப்பொருள் வியாபாரிகள், பெண் மற்றும் சிறுவர் துஷ;பிரயோகம் ஆகியன அற்ற பாதுகாப்பான ஒரு நாடாக மாற்றமடையச் செய்வதற்கு தேவையான அரச பாதுகாப்பு கட்டமைப்பினை நாம் மீண்டும் பலப்படுத்துவோம். நாம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேண விரும்புகின்றோம். ஆயினும் உலக அரசியலில் பல்வேறு இனங்களுக்கிடையிலான அதிகாரப் போரில் தலையிட நாம் விரும்பவில்லை. ஆகையால் எமது நாட்டுடனான நட்புறவின் போது எமது நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் மதித்து நடக்குமாறு நாம் அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம். எதிர்கால தலைமுறைக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது எமது முதன்மை பொறுப்பாகும். ஆகையால் ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உலகில் முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக இலங்கையை மாற்ற எதிர்பார்க்கின்றோம்.
இத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்தே இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். எதிர்த்தரப்பினை ஏளனப்படுத்தாது, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகியன அற்ற இயற்கைநேய தேர்தல் நடவடிக்கைகள் மூலம் ஏனையோர்களுக்கு முன்னுதாரணமாக திகழ எமக்கு முடிந்தது. அரச நிர்வாகத்திலும் அந்த முன்மாதிரியை முன்னெடுத்துச் செல்ல நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். சட்டத்தையும் நீதியையும் மதிக்கும் சமூக நீதியை பாதுகாக்கும் இலஞ்ச, ஊழலற்ற உண்மையான மக்கள் சேவைக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டு தொழில்சார் தகைமையின் செயற்திறன்மிக்க அரச நிர்வாகத்துறையினை மீண்டும் இந்நாட்டில் ஏற்படுத்துவேன் என நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருப்பதைப் போல் எமது ஆட்சியில் நிர்வாகத்தினை முன்னெடுக்கும்போதும் பொறுப்புக்களை பெற்றுக்கொடுக்கும்போதும் இயலுமைக்கும் அறிவுக்கும் முதலிடத்தை பெற்றுக்கொடுப்போம். எமது எதிர்கால சந்ததியினருக்காக ஏராளமான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியிருக்கின்றது. உலகின் புதிய பொருளாதார செயற்பாடுகளின் உச்சக்கட்டப் பயனை அடைவதற்கு தேவையான அறிவை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்களது ஆற்றல்களை வளப்படுத்துவதற்கும் தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்போம். 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கத்தக்க வகையில், நமது மக்களை தயார்படுத்துவதற்கு வகையில் நாட்டின் அனைத்து துறைகளிலும் புதிய தொழிநுட்ப உபயோகத்தை ஊக்குவிப்போம். எமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒழுக்கமிக்க சமூகமாக கட்டியெழுப்புவதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினை நல்குவீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
ஜனாதிபதி என்ற வகையில் நாட்டின் சகல மக்களுக்கும் சேவையாற்றுவதே எனது பொறுப்பாகும். ஆகையால் எனக்கு வாக்களித்தவர்களினதும் வாக்களிக்காதவர்களினதும் சமூக உரிமைகளை நான் பாதுகாப்பேன். அத்தோடு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். எம்முன் பெருமளவு பொறுப்புக்கள் குவிந்திருக்கின்றன. பெருமளவு பணிகளை குறுகிய காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டியிருக்கின்றது. தேவையிருப்பின் எம்மால் சாதிக்க முடியாத எதுவுமேயில்லை. வெற்றிகொள்ள முடியாத சவால்களுமில்லை. நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான நோக்கும் வேலைத்திட்டமும் எம்மிடம் இருக்கின்றன. அதற்கான திட்டங்களை சுபீட்சத்தின் நோக்கு எனும் எமது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் நாம் உங்களுக்கு அறியத்தந்திருக்கின்றோம்.
நான் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாவேன். நாட்டின் நலனுக்காக எனது அந்த அதிகாரங்களை செயற்படுத்த நான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. ஆகையால் சுபீட்சமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் பெற்றுக்கொடுத்திருக்கும் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க மக்கள் ஆணையினை செயற்படுத்துவதற்கு எனது கொள்கைக்கேற்ப செயற்படக்கூடிய புதிய அரசாங்கத்தை நான் நிறுவுவேன்.
நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்கின்றேன். எனக்கு எனது நாடு பற்றிய நோக்கு இருக்கின்றது. ஆகையால் எதிர்கால சந்ததியினருக்காக சுபீட்சமான தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் என்னுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு தேசப்பற்றுமிக்க சகல இலங்கையர்களிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
மும்மணிகளின் ஆசிகள்.