9
இலங்கையில் உள்ள கியூபக் குடியரசின் தூதுவர் ஜுவானா எலெனா ராமோஸ் ரொட்ரிகஸ் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை டிசம்பர் 04, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். மருந்துப் பொருட்கள் மற்றும் கரும்புத் தொழில்கள் உட்பட கியூபாவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளால் இலங்கை பயனடைகின்ற ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்தும், இலங்கையுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலமாக கியூபாவின் தேங்காய் தொழில் துறையின் அபிவிருத்திகளுக்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
2019ஆம் ஆண்டில் இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில், இலங்கையின் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மூலோபாயக் கற்கைகளுக்கான நிறுவனம் மற்றும் கியூபாவின் ரவுல் ரோ கார்சியா சர்வதேச உறவுகளுக்கான உயர் நிறுவனம் ஆகியவற்றினதும், மற்றும் கியூப அரசாங்கத்தால் மருத்துவ இளங்கலைக் கற்கைகளுக்காக இலங்கைக்கு வழங்கப்படும் உதவித்தொகையினூடான உயர் கல்வியினதும் ஒத்துழைப்பை இரு தரப்பினரும் வரவேற்றனர். வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை மற்றும் கியூபாவின் வணிக சபைகளுக்கு இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் அவர்கள் வரவேற்றனர்.
மிதமான மற்றும் நட்பு ரீதியான இருதரப்பு உறவுகளை பாரம்பரியமாக கட்டியெழுப்புவதுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான இலங்கை மற்றும் கியூபா இடையேயான பன்முகத் துறையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இது தொடர்பாக, இலங்கைக்கு பல்தரப்பு அரங்குகளில் வழங்கப்பட்ட நிலையான மற்றும் உறுதியான ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் கியூப அரசாங்கத்திற்கு தனது நேர்மையான பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், அவை கியூபத் தூதுவரிடம் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஹைட்டி குடியரசில் உள்ள இலங்கை ஊழியர்களின் நலனைக் கவனிப்பதற்காக கியூப மருத்துவக் குழுவை அனுப்பியதன் மூலம், இந்த ஆண்டு மே மாதத்தில் முக்கியமானதொரு நேரத்தில் இலங்கை ஆடைத் தொழிலுக்கு அளித்த ஆதரவுகளுக்காக கியூப அரசாங்கத்துக்கு அமைச்சர் குணவர்தன நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கை மற்றும் கியூபாவால் கோவிட்-19 தொற்றுநோய் திறம்பட கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கப்படுவது தொடர்பில் பிரதிபலித்த கியூபத் தூதுவர், தடுப்பூசியொன்றின் உருவாக்கம் தொடர்பாக கியூபா இதுவரை மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சருக்கு விளக்கமளித்தார். கோவிட்-19 தொற்றுநோயின் போது உலகிற்கு மகத்தான சேவையை வழங்கிய கியூப மருத்துவக் குழுக்களுக்கு, 'இலங்கையிலுள்ள கியூபாவின் நண்பர்கள்' அளித்த ஆதரவுகளுக்காக அவர் ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இறுதியாக, உலகப் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், பதவியேற்றதிலிருந்து அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரத் துறைகளில் மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கத்தின் சாதனைகளை தூதுவர் ரொட்ரிகஸ் பாராட்டினார்.
கொழும்பு
2020 டிசம்பர் 06