இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ஆபிரிக்கத் தூதுவர்களின் இரண்டாவது  குழுவுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ஆபிரிக்கத் தூதுவர்களின் இரண்டாவது  குழுவுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

புதுடில்லியிலிருந்து இலங்கைக்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இராஜதந்திரத்  தூதரகங்களுடனான ஈடுபாடுகளின் தொடர்ச்சியாக, ஆப்பிரிக்கத் தூதரகத் தலைவர்களின் இரண்டாவது குழுவுடன் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட 2022 செப்டம்பர் 16ஆந் திகதி கலந்துரையாடினார். ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுடன், குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இலங்கையின் ஈடுபாட்டை அதிகரிப்பதே இந்த ஈடுபாட்டின் பிரதான நோக்கமாகும்.

முன்னதாக, ஆகஸ்ட் 18ஆந் திகதி உயர்ஸ்தானிகர் மொரகொட, புதுடில்லியிலிருந்து  இலங்கைக்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற அல்லது நியமிக்கப்பட்ட ஒன்பது ஆபிரிக்கத் தூதுவர்கள் அடங்கிய குழுவுடன் உரையாடினார்.

உயர்ஸ்தானிகர் மொரகொட, புதுடில்லியில் பதவியேற்ற பின்னர், ஒரே நேரத்தில் அங்கீகாரம்  பெற்ற தூதரகத் தலைவர்களைச் சந்திப்பது இது ஆறாவது முறையாகும். முன்னதாக, அவர் ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தூதரகத் தலைவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

அழைக்கப்பட்டிருந்த தூதுத் தலைவர்களை வரவேற்ற உயர்ஸ்தானிகர் மொரகொட,  அந்தந்த நாடுகளுடன் குறிப்பாக வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் இலங்கையின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, தனது அலுவலகத்தின் அனைத்து ஆதரவையும் அவர்களுக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்தும் அவர்  தூதரகத் தலைவர்களுக்கு விளக்கினார்.

ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற 94 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான முக்கிய ஒருங்கிணைப்புப் புள்ளியாக புதுடில்லியில்  உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் செயற்படுகின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புதுடில்லி

2022 செப்டம்பர் 21

Please follow and like us:

Close