இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு  விழா காத்மாண்டுவில் கொண்டாட்டம்

 இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு  விழா காத்மாண்டுவில் கொண்டாட்டம்

இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேபாள உலக  விவகார சபையுடன் இணைந்து இலங்கைத் தூதரகத்தால் 2022 டிசம்பர் 19ஆந் திகதி காத்மாண்டுவில் ஏற்பாடு செய்யப்பட்ட 'நேபாள - இலங்கை நட்புறவு: பழங்காலத் தொடர்புகளில் இருந்து நிகழ்காலம்' என்ற தலைப்பிலான உரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் கட்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்காக மார்ச் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட தனது சொந்த விஜயம் உட்பட சமீபத்திய உயர்மட்ட அரசியல் ஈடுபாடுகள் குறித்து அமைச்சர் கட்கா உரையாற்றினார். பொது மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் வர்த்தக உறவுகளை உயர்த்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி காணொளி இணைப்பின் ஊடாக  விசேட செய்தியொன்றை வெளியிட்டு கௌதம புத்தரின் காலத்து தொன்மையான இணைப்புக்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர் லும்பினியை இலங்கையையும் நேபாளத்தையும் பிணைக்கும் தொப்புள் கொடி எனக் குறிப்பிட்டார். இரு நாடுகளும் நெருக்கடியான நேரங்களில் ஒருவருக்கொருவர் உதவுவதற்கு அசையாத விருப்பத்துடன் இருப்பது இலங்கை - நேபாள நட்புறவின் முக்கிய பலமாவதாக அவர் குறிப்பிட்டார்.

நேபாளத்தின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும், 2005-2009 வரையிலான இலங்கைக்கான தூதுவருமான துர்கா பிரசாத் பட்டராய் நேபாளத்தில் இருந்து  சிறப்புரை ஆற்றியதுடன், பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத பண்டைய தொடர்புகள் மற்றும் பௌத்தம் மற்றும் ராமாயணத்தின் மூலம் உறவுகளை மேம்படுத்துவதற்கு அவர்கள் எவ்வாறு பங்களித்தார்கள் என்பதை எடுத்துக்காட்டினார். பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக இருதரப்பு சட்டக் ஆவணங்களின் மூலம், குறிப்பாக கூட்டு ஆணைக்குழு மற்றும் விமான சேவைகள் ஒப்பந்தம் மூலம் அமைக்கப்பட்ட சட்ட அடிப்படைகள் குறித்தும் அவர் உரையாற்றினார். 2021 இல் விமான இணைப்பை மீண்டும் நிறுவுவதானது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக வரவேற்கப்பட்டது.

இலங்கையில் இருந்து, பிம்ஸ்டெக்கின் முன்னாள் செயலாளர் நாயகமும், 2009-2012 வரை நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவருமான சுமித் நாகந்தல காணொளி இணைப்பு  மூலம் சிறப்புரை ஆற்றினார். வர்த்தகம் மற்றும் முதலீட்டில் வேகத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தையும், சமாதானத்தின் மையமாக லும்பினியின் அபிவிருத்திக்கு இலங்கை ஆதரவளிப்பதற்கான பங்கையும் அவர் எடுத்துரைத்தார். பொருளாதார உறவுகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவக்கூடிய பயனுள்ள தளமாக பிம்ஸ்டெக்கில் குறிப்பாக கவனம் செலுத்தி, பிராந்திய இணைப்பின் பின்னணியில் ஒத்துழைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை அவர் மேலும் வலியுறுத்தினார்.

நேபாள உலக விவகார சபையின் தலைவர் ஹேமந்த கரேல் மற்றும் நேபாளத்துக்கான  இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணதிலக ஆகியோரும் உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு  பங்களித்த தூதரக உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், முன்னாள் தூதுவர்கள், அறிஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் நேபாளத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தூதரகம்

காத்மாண்டு

2022 டிசம்பர் 21

Please follow and like us:

Close