புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் மகேத் மொஸ்லே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 19ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
தூதுவர் மொஸ்லேவுக்கு அன்பான வரவேற்பைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக்காலத்தின் போது அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் மொஸ்லே ஆகியோர் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், முக்கியமான உலகளாவிய சமகாலப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் பீரிஸ் எகிப்தியத் தூதுவருக்கு விளக்கினார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில் எகிப்துக் குடியரசு இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக அமைச்சர் பீரிஸ் எகிப்தியத் தூதுவருக்கு ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார். பலதரப்பு அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை இலங்கை மதிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்விற்கான இலங்கையின் ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடினார்.
மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் சார்ந்த எண்ணக்கருவில் ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்துடனான நீண்ட கால ஈடுபாட்டுக் கொள்கையை இலங்கை தொடரும் எனக் குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இலங்கை தனது அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட மனித உரிமை சார்ந்த கடமைகள் மற்றும் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சர்வதேசக் கடமைகளுக்கு கட்டுப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வின் போது இலங்கைக்கு தொடர்ச்சியாக எகிப்தின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்குமாறு அமைச்சர் பீரிஸ் கோரிக்கை விடுத்தார். எதிர்வரும் 51ஆவது கூட்டத் தொடர் உட்பட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கான எகிப்தின் தொடர்ச்சியான ஆதரவை தூதுவர் மகேட் மொஸ்லே உறுதியளித்தார்.
நீண்டகால சுமுக உறவுகளைப் பாராட்டி, 2022ஆம் ஆண்டு இலங்கை - எகிப்து இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 65 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு இரு தரப்பினரும் கலந்துரையாடி இணக்கம் தெரிவித்தனர்.
நிலுவையில் உள்ள வரைவு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைந்து நிறைவு செய்தல், தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவித்தல், தீவிரமயமாக்கலை இல்லாதொழித்தல், எகிப்தின் மதிப்புமிக்க கலாச்சார மற்றும் மத நிறுவனங்களின் மூலம் மதங்களுக்கு இடையிலான உரையாடலை முன்னெடுத்தல் மற்றும் 2022இல் கொழும்பில் வெளிநாட்டு அமைச்சுக்களுக்கு இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் இரண்டாவது அமர்வை நடாத்துதல் ஆகியன குறித்து இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
பரஸ்பர ஆர்வத்தின் பிராந்திய மற்றும் சர்வதேச அபிவிருத்திகள் மற்றும் ஒத்த கருத்துடைய பிராந்தியத் தொகுதிகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியன குறித்தும் இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கொழும்பில் உள்ள எகிப்து தூதரகத்தின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 மார்ச் 21