இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (25 ஜூன்) அமைச்சில் வைத்து சந்தித்தார்.
கலாநிதி. சிங்கை இலங்கைக்கு வரவேற்ற அமைச்சர்,1952 ஆம் ஆண்டில் கொழும்பில் நிறுவப்பட்ட முதல் ஐ.நா. நிறுவனமான உலக சுகாதார அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தார். கோவிட்-19 தொற்றுநோயின் போது இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் அளித்த உதவியை பாராட்டிய அவர், இலங்கை மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதில் தொடர்ச்சியான ஆதரவுகளைக் கோரினார். கோவிட்-19 சவால்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில் உலக சுகாதார நிறுவனத்துடன் வலுவான ஒற்றுமையுடன் நின்ற முதல் நாடுகளில் இலங்கையும் காணப்பட்டமையை அமைச்சர் குணவர்தன நினைவு கூர்ந்தார்.
இந்த அமைப்புடனான இலங்கையின் ஒற்றுமையைப் பாராட்டிய கலாநிதி. சிங், கோவிட்-19 தொற்றுநோயை நிவர்த்தி செய்வதிலும், இந்தக் காலகட்டத்தில் ஏனைய சுகாதார சேவைகளின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதிலும் உலக சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.
ஈர்க்கக்கூடிய சுகாதாரப் பாதுகாப்புக் குறிகாட்டிகளை உருவாக்கும் இலங்கையின் சிறந்த சுகாதாரப் பாதுகாப்பு முறையையும், பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு இலங்கை முன்மாதிரியாக இருப்பதையும் அவர் பாராட்டினார்.
கோவிட்-19 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குதல் மற்றும் கோவிட்-19 க்குப் பின்னரான மீட்புக் உலக சுகாதார நிறுவனத்தின் உதவிக்கு கலாநிதி. சிங் உறுதியளித்தார். இந்த ஆண்டின் 3 வது காலாண்டில் தடுப்பூசிகள் கிடைப்பது கணிசமாக அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் சுகாதாரப் பராமரிப்பு முறைமை மற்றும் ஆராய்ச்சி வசதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக, உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 ஜூன், 25